நேற்று மறைந்த வைகோவின் தாயர் மாரியம்மாள் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் அறிக்கை இயல்பாக யதார்த்தமாக இருக்கிறது.
அந்த அறிக்கையில் கி.வீரமணி கூறியுள்ளதாவது:
“ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அருமைச் சகோதரர் வைகோ அவர்களின் அன்னையார் மாரியம்மாள் (வயது 95) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
மறைந்தவர் வைகோ அவர்களுக்கு அன்னையார் மட்டுமல்ல; வைகோ அவர்களின் பொதுத் தொண்டுக்கும், பொது வாழ்வுக்கும் ‘ஆசி’ வழங்கும் ஊக்கச் சக்தியாகவும் இருந்தவர். அவரே பல பொது நிகழ்ச்சிகளில் நேரடியாகப் பங்குகொண்டும் உள்ளார்.
சகோதரர் வைகோ அவர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய நிகழ்வு என்பதில் அய்யமில்லை.
அதேநேரத்தில், அன்னையார் அவர்கள் குறைந்த வயதில் மறைந்துவிடவில்லை. நிறைவாழ்வு வாழ்ந்தவர் – தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பகுத்தறிவு நெறிப்படி வைகோ அவர்கள் ஆறுதலும், அமைதியும் கொள்வார்களாக!
பெருந்துயரத்தில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினருக்கும் நமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”
– இவ்வாறு தனது அறிக்கையில் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.