படத்தில்: சதாம் உசேன், சஞ்சய் மாத்தூர்
வெளிநாட்டு வேலைக்குச் சென்றால் சென்றால் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. இதனால் தங்களது வீடு, நிலங்களை விற்றும், அடகு வைத்தும், வட்டிக்குக் கடன் வாங்கியும் டிராவல் ஏஜெண்டுகளிடம் கொடுத்து மலேசியா, சவுதி, குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறார்கள்.
ஆனால் இப்படி செல்பவர்களில் சிலருக்கு மட்டுமே தகுதியான வேலை கிடைக்கிறது. பெரும்பாலானவர்கள் ஒட்டகம் மேய்ப்பது, கழிப்பிடங்களை சுத்தம் செய்வது போன்ற பணிகளில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இதற்குக் காரணம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அப்பாவி மக்களை ஏமாற்றும் டிராவல் ஏஜெண்டுகள்தான்.
இப்படி டிராவல் ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்கள் மிகக் குறைவான சம்பளம், குறந்த அளவு உணவு, பாதுகாப்பில்லாத தங்குமிடம் என்று கொத்தடிமைகளாக துயரத்தை அனுபவிக்கிறார்கள். பெண் தொழிலாளர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
இவர்களது பாஸ்போர்ட்டுகளை நிர்வாகத்தினர் பிடுங்கிவைத்துக்கொள்வதாலும், பணம் இல்லாததாலும் ஊர் திரும்பவும் முடியாத நிலையில் தவிக்கிறார்கள்.
சமீபத்தில்கூட, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சதாம் உசேன் (25). என்பவர் ஏமாற்றப்பட்டு குவைத்தில் கொத்தடிமையாக ஆக்கப்பட்டார். அவர் தனது துயர நிலையை வாட்ஸ் அப் மூலம் அறிக்க… ஊடகங்களில் அவரது வீடியோ வெளியானது. இதையடுத்து பலரது உதவியால் அவர் நாடு திரும்பினார்.
இந்த நிலையில் வெளிநாட்டு வேலை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியை தமிழக காவல்துறை துவங்கியுள்ளது.
இதுபற்றி திருச்சி மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் தெரிவித்துள்ளதாவது:
“குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பலர், பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
மிக அதிக வேலைப்பளு, உரிய ஊதியம் இன்மை, உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல்கள், தொழிலாளர் நலச் சட்ட உதவிகள் இன்மை, சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவிப்பது, உட்பட பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.
இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதால், குறிப்பிட்ட சில நாடுகளுக்கு பணியாட்களை அனுப்பி வைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. ஆனால், அதையும் மீறி வெவ்வேறு வழிகளில் சிலர் அந்த நாடுகளுக்குச் சென்று, பலவித துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.
எனவே, வீட்டு வேலை மற்றும் வெவ்வேறு பணிகளுக்காக, குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டத்துக்குப் புறம்பாகச் செல்ல வேண்டாம்.
மேலும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து, சட்டத்துக்குப் புறம்பாக அப்பாவி மக்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் டிராவல் ஏஜென்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் தெரிவித்தார்.
வெளிநாட்டில் கொத்தடிமையாக இருந்து, தப்பித்து வந்த சதாம் உசேன், தன்னை ஏமாற்றிய இரண்டு ஏஜெண்டுகள் மீது புகார் கூறினார். அந்த இரு ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை.