அகமதாபாத்
நேற்று அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 241 பேர் மரணம் அடைந்துள்ளதாக ஏர் இந்தியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது/

இந்தியாவின் 7-வது பரபரப்பான விமான நிலையமாக கருதப்படும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது., அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம 1.38 மணியளவில் லண்டனுக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர்.
இந்த விமானத்தை சபீர் சபர்வால் என்ற விமானி ஓட்ட அவருக்கு துணையாக கிளைவ் குந்த் என்ற துணை விமானியும் இருந்தார். விமானம் வானில் பறந்த ஒரு சில நிமிடங்களிலே அதாவது தரையில் இருந்து 825 அடி உயரத்தை எட்டியபோது விமானியிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு ‘மே டே அழைப்பு’ வந்தது. ‘மே டே அழைப்பு’ என்பது சர்வதேச அளவில் அபாயத்தை தெரிவிக்கவும் உடனடி உதவி வேண்டும் என்பதைக் குறிக்கும் ரேடார் சிக்னலாகும். இதை ஏற்ற கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மீண்டும் விமானியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் விமானத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அவர்களால் விமானியை தொடர்பு கொள்ள இயலவில்லை.
சில நிமிடங்களில் அந்த விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி அதில் இருந்து எழுந்த தீப்பிழம்புகளும், கரும்புகையும் கிளம்பியது. இதுகுறித்து விமான நிலைய தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விமானம் புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே அதாவது 15 கி.மீ தொலைவில் உள்ள மேகானி நகரில் இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. இந்த விபத்தில், குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். இதில், விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று கூறப்பட்டது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த ஒரு பயணி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேரும் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், 242 பேரில் ஒருவர் மட்டும் பிழைத்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த 242 பேரில் இந்தியர்கள் 169 பேர், பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 53 பேர், போர்ச்சுகல் நாட்டினர் 7 பேர், கனடாவைச் சேர்ந்தவர் ஒருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.