டாக்கா

தீவிரவாதிகளுடன் சேர்ந்து விமானத்தை கடத்த திட்டமிட்ட வங்க தேச விமானி அவர் தாயுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்க தேசத்தில் கடந்த 2013ஆம் வருடத்தில் இருந்தே இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.   இதற்கு வெளிநாட்டு இஸ்லாமிய இயக்கங்களான ஐஎஸ் மற்றும் அல் கொய்தா ஆகிய அமைப்புகளே காரணம் என சொல்லப்படுகிறது.   ஆனால் வங்க அரசு இதை மறுத்து வருகிறது.   வெளிநாட்டு தீவிரவாதிகள் நாட்டுக்குள் கிடையாது எனவும் இந்த தாக்குதல்களுக்கு முழுக் காரணம் உள்நாட்டு தீவிரவாத இயக்கமான வங்க தேச ஜமாஅதுல் முஜாகிதீன் மட்டுமே அனைத்து பயங்கரவாத செயல்களை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

இந்த வருடம் அக்டோபர் மாதம் 26ஆம் தேதி இந்த இயக்கத்தின் முக்கிய புள்ளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் கொடுத்த தகவலின் படி இந்த இயக்கம் பிமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றை கடத்த திட்டமிட்டிருந்தது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.   அந்த தகவலின் படி இதற்கான சதித்திட்டம் தீட்டிய விமான ஓட்டி சபீர் இமாம் (வயது 31), அவருடைய தாயார் சுல்தானா பர்வீன் (வயது 55) மற்றும் ஜமாஅதுல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்த இருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சபீர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்த ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணி புரிவதாகவும்,  அவருடைய தாயார்தான் இந்த திட்டத்தின் முக்கிய ஆணிவேர் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.    இவர்கள் அனைவரும் தீவிரவாதிகளின் துணையுடன் விமானத்தை கடத்தவும்,  வேறு சில தீவிரவாதிகளைக் கொண்டு விமானத்தை வங்க தேச தலைவர்கள் சிலரின் வீடுகளில் மோதவும் திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   இவர்கள் அளித்த தகவலின்படி மிர்பூர் பகுதியில் நேற்று இரவு மேலும் நான்கு ஜமாஅதுல் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் தெரிவித்த வங்க தேச அதிகாரி ஒருவர்  சரியான நேரத்தில் நடந்த இந்த கைதுகளால் பெரிய சதி ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.