download
முந்தைய அரண்மனைதான். ஆனால் வேறுவிதமாக ஜோடித்து, நம்மை ரசிக்க வைத்துவிடுகிறார் இயக்குநர் சுந்தர்.சி.  பேய் படத்துக்கு என்ன தேவை? திடுக் திடுக் என்று அவ்வப்போது பயப்பட வேண்டும். அதோடு கொஞ்சம் சிரிப்பு வேண்டும். அதை சரிவிகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார். தனித்தனி காட்சிகளாக சொல்ல வேண்டியதில்லை.. படம் முழுதும் பகீர் காட்சிகளும், குபீர் சிரிப்புகளும் பூந்தியில் விரவிக்கிடக்கும் முந்திரி மற்றும் திராட்சை போல விரவிக்கிடந்து சுவையூட்டுகின்றன.
இந்த பேய்(ப்படத்து)க்கு முதல் பலி, சித்தார்த் தான். ஹீரோவாக உலாவரும் சுந்தர்.சி., இன்னொரு ஹீரோவாக.. ஏன் அதைவிட அதிகமாகவே வரும் சூரி ஆகியோருக்கிடையில் பரிதாபமாக வந்து போகிறார் சித்தார்த்.
சித்தார்த்துக்கு ஜோடியாக த்ரிஷா. என்ன மாய மந்திரம் வைத்திருக்கிறாரோ.. நாளாக ஆக, வயது குறைந்துகொண்டே போகிறது. சின்னப்பையன் சித்தார்த்துக்கு இணையாக ஆட்டம் போடுகிறார். அதுவும் அந்த பாடல் காட்சியில் தனது நீண்ண்ண்ட காலால் சித்தார்த்தின் பாக்கெட்டில் இருக்கும் கண்ணாடியை எடுக்கும் காட்சி… ஆஹா! அதோடு, பயந்த பெண்ணாக வந்த இவர், பேயாட்டம் போடுவதும் அதிரவைக்கிறது!
ஒரிஜினல் பேயாக வரும் ஹன்சிகா, இயல்பான (!) பேயாக வந்து  மிரட்டுகிறார். பூனம்பஜ்வாவும் ஓகே ரகம்.
படத்தில் எல்லோரையும் விட ஸ்கோர் செய்வது சூரிதான். மினி மீசை வைத்த அந்த அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு, “பேங்க்ல பணத்தையா போட்டாங்க.. கிணத்துல பொணத்தை போட்டுட்டாங்கடா” என்றெல்லாம் புலம்புவதும், தன்னை “காதலிக்கும்” கோவை சரளாவிடமிருந்து எஸ்கேப் ஆக தவிப்பதும்.. சூரி தனது பெயரை சிரி என்றே மாற்றிக்கொள்ளலாம். தியேட்டரை அதிரச் செய்யும் சிரிப்பு பாம் அவர்.
அவருக்கு துணையாக வரும் டிவி பிரபலம், இன்னமும் ஸ்டேண்ட் அப் காமெடியனாகவே இருக்கிறார். கொஞ்சம் தேற வேண்டும்.
கோவை சரளா பற்றி சொல்லவேண்டுமா என்ன… ?
படம் துவங்கிய சில காட்சிகளிலேயே ராதாரவியை  சாய்த்துவிட்டார்களே என்று நினைத்தால்.. ஃப்ளாஷ்பேக்கில் பின்னுகிறார் மனிதர். அதுவும், மகளை மடியில் வைத்து “பாசத்தோடு” கழுத்தை நெறித்து கொல்லும் காட்சி.. டெரர்!
சுந்தர்.சி., அப்போதுதான் தூங்கி எழுந்து வந்தவர் மாதிரியே படம் முழுதும் திரிகிறார். ஆனால் கடைசி காட்சிகள், யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் என்பதோடு, சுந்தர். சியும் மிரட்டியிருக்கிறார்.
அந்தரத்தில் மனிதர்கள் மிதப்பது உட்பட கிராபிக்ஸ் காட்சிகள் வழக்கமானவைதான் என்றாலும் ரசிக்க வைக்கின்றன.
ஹிப் ஹாப் தமிழாவின் இசையில் , “குச்சிமுட்டாய்”, அம்மன் பாடல் இரண்டும் குத்தாட்டம் போட வைக்கின்றன.
பேய்ப்படத்தில் ரசிகர்களை மிரள வைக்க வேண்டும் என்பது நியாயம்தான்.  அதற்காக திடுமென அம்மன் பாடலுக்கு குஷ்புவை ஆடவைத்திருக்க வேண்டுமா  டைரக்டர் சார்? பாவம், அவரும் சிரமப்பட்டு, நம்மையும் சிரமப்படுத்துகிறார்.
யு.கே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு, பேய்ப்படத்துக்கு போதுமானது.
ஹன்சிகாவின்  அறிமுகம், காதல், வீட்டோவிட்டு ஓடவது.. எல்லாவற்றையும் மிகச் சில நிமிடங்களை அற்புதமாய் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. அதோடு, ஹன்சிகா கொல்லப்படும் காட்சி பதைபதைக்க வைக்கிறது. இந்த எபிசோட் தனி திரைப்படம் போல ஜொலிக்கிறது.
மொத்தத்தில் படம் ரசிக்கவைக்கிறது.  ஆனால் மெல்போர்ன் மைதானத்தில் முதல்தர கிரிக்கெட் ஆடும் திறமை உள்ளவர், ரப்பர் பந்தில் “சிறுவர் கிரிக்கெட்” ஆடுகிறாரே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது!