sarath accஆலங்குளம்:

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தொழிலாளியை தனது காரில் ஏற்றி, மருத்துவமனையில் சேர்த்தார் நடிகர் சரத்குமார்.

நேற்று முன்தினம் மதியம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள நெல்லை மாவட்டம் வந்தார் நடிகரும் எம்.எல்.ஏ.வுமான சரத்குமார். ஆலங்குளம் – தென்காசி சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, வழியில் கூட்டமாக மக்கள் நிற்பதைப் பார்த்து காரை நிறுத்தி விசாரித்தார்.

அங்கிருந்தவர்கள், “இருசக்கர வாகனத்தில் வந்த முத்துகுமார் என்பவர் மீது மினிலாரி ஒன்று மோதிவிட்டு சென்றுவிட்டது. 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து இன்னும் வரவில்லை” என்று கூறினர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த முத்துக்குமாரை தனது காரில் ஏற்றிக் கொண்டு ஆலங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். காயம்பட்டவருக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சரத்குமார் அனுப்பி வைத்தார்.

மேலும் அரசு ஆஸ்பத்திரி டீனை செல்போனில் தொடர்பு கொண்டு முத்துக்குமாருக்கு தேவையான சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

விபத்தில் காயமடைந்து நடுரோட்டில் உயிருக்கு போராடிய தொழிலாளியை மீட்டு முதலுதவி கிடைக்க செய்தது மட்டுமின்றி, அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க நடவடிக்கை எடுத்த சரத்குமாரை அனைவரும் பாராட்டினர்.

இதுதொடர்பாக சரத்குமார் , ‘விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய நேரத்தில் முதலுதவி கிடைத்தால் உயிரிழப்பை தடுக்கலாம். அதற்கு பொதுமக்கள் உதவவேண்டும். யார் விபத்தில் சிக்கினாலும் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்கு சேர்க்க வேண்டியது நமது கடமை’ என்றார்.

“விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றினால் நாமும் வழக்கு வாய்தா என்று அலைய வேண்டியிருக்குமோ என்ற பயத்திலேயே பலரும் உதவாமல் சென்றுவிடுகிறார்கள். ஆனால் அப்படி ஏதும் பிரச்சினை வராது. யாராக இருந்தாலும் விபத்தைப் பார்த்தால் உடனடியாக உதவலாம். காப்பாற்றியவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது  என்பதை என்றும் சரத்குமார் தெரிவித்தார்.