பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபி உள்நாட்டு கிரிக்கெட் தொடரில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
சத்தீஷ்கர் அணியும் மற்றொரு அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
தமிழக அணி, தனது காலிறுதிப் போட்டியில், பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்தது. மழை பெய்து வந்ததால், ஆட்டம் 47 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஆடுகளம் மோசமாக இருந்ததால், தமிழ்நாடு அணியால் பேட்டிங்கில் சோபிக்க முடியவில்லை.
தமிழக அணி 39 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்திருந்தபோது, வானம் மீண்டும் பொத்துக்கொண்டது. எனவே, தமிழக அணியின் ஆட்டம் அதோடு நிறுத்தப்பட்டு, 39 ஓவரில் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், பஞ்சாப் அணி ஆடிக்கொண்டிருந்தபோது, மீண்டும் மழை பெய்ததால், போட்டி கைவிடப்பட்டு, லீக் போட்டி புள்ளிகளின் அடிப்படையில் தமிழக அணி வென்றாக அறிவிக்கப்படவே, அரையிறுதியில் நுழைந்தது தமிழ்நாடு அணி.
மற்றொரு போட்டியில், மும்பை அணியை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது சத்தீஷ்கர் அணி.