நடிகர் விஜய்க்கும் நடிகர் விஷாலுக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம். இதில், விவசாயிகள் வேறு பற்றவைக்கிறார்கள்.
விஜய்க்கும் விஷாலுக்கும் எங்கு எதிர்ப்பு எழுந்ததோ தெரியவில்லை. ஆனால், இருவருக்கிடையேயும் பல வருடங்களாகவே எதிர்ப்பு அலைகள் அடித்துக்கொண்டேதான் இருக்கின்றன. விஜய் தனது சகோதரர் விக்ராந்த் வளர்ச்சியில் அக்கறையில்லாமல் இருந்தார். இதைப்புரிந்துகொண்ட விஷால், அவரை தனது படத்தில் நடிக்க வைத்ததோடு அல்லாமல், விக்ராந்தை தனது தம்பியாக கருதுகிறேன் என்றும் அறிவித்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் எழுந்த கருத்து மோதல்களுக்கு பின்னர் விஜய்யின் ரசிகர் மன்ற தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார் ஜெயசீலன். விஜய்க்கு எதிரானவர் என்ற கோணத்தில்தான் விஷாலிடம் போய்ச்சேர்ந்தார் ஜெயசீலன். அங்கு சென்ற பிறகுதான், விஷால் சமூக நலப்பணிகளில் அதிகம் அக்கறை செலுத்தி வருகிறார். விஜய்க்கு போட்டியாக விஷாலை கொண்டு வரும் நோக்கில் செயல்பட்டு வருகிறார் ஜெயசீலன்.
இந்த நிலையில்தான் விஜய் மீதான பஞ்சாயத்தை விஷாலின் கவனத்திற்கு கொண்டு வருகிறார்கள் விவசாயிகள். விஜய்யின் ‘கத்தி’ வெளிவந்த அதே நாளில் விஷாலின் ‘பூஜை’யும் வெளிவந்தது. இப்போது அதே ‘கத்தி’யை வைத்துதான் விஜய் – விஷால் இடையே தீ மூட்டுகிறார்கள் விவசாயிகள்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புராஜசேகர். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வழிகாட்டுதலோடு தாகபூமி என்ற குறும்படம் எடுத்து வெளியிட்டார். அதன் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடுப்பில் வெளியான கத்தி திரைப்படம், தன்னுடைய தாகபூமி கதை என்று தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தாகபூமி இயக்குநர் அன்பு.ராஜசேகருக்கு ஆதரவாக தஞ்சை மாவட்டத்தில் பல விவசாயிகள் நியாயம் கேட்டு கையெழுத்து இயக்கம் முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.
போராட்டத்தின் அடுத்த கட்டமாக கள்ளப்பெரம்பூர் கிராமத்து விவசாயிகள் நடிகர் சங்கத்தின் மூலம் நீதி கேட்டு நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு தாகபூமி பற்றிய தகவல்களுடன் ஒரு மனுவும், அதோடு சொந்த வயலில் விளைந்த நெல்லில் இருந்து எடுக்கப்பட்ட அரிசி ஒரு மூட்டையும சேர்த்து அனுப்புகிறார்கள்.