thamilzhai
மீண்டும் விஜயகாந்தை எதிர்ப்பார்த்து திமுக தலைவர் கருணாநிதி இருக்கிறார். இந்நிலையில் பாஜகவின நிலை என்ன? இது குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
’’அ.தி.மு.க. – தி.மு.க. ஆகிய இரு கட்சிகளோடும் கூட்டணி இல்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீண்டும் அறிவித்து விட்டார். அதன் பிறகும் அவர்களோடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது என்றெல்லாம் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறுவது ஏன்? அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டதா? இல்லை தற்போது அமைத்துள்ள கூட்டணி கட்சிகளால் ஜெயிக்க முடியாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா?
விஜயகாந்த் தனது தலைமையில்தான் கூட்டணி என்று கூறி விட்ட நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மீண்டும் அழைப்பு விடுத்து இருப்பதால் தே.மு.தி.க. தலைமை ஏற்க தயாராக இருக்கிறாரா? என்பதை தெளிப்படுத்த வேண்டும். அல்லது தி.மு.க.வை தில்லுமுல்லு கழகம் என்று தே.மு.தி.க. விமர்சித்ததை ஏற்றுக் கொள்கிறாரா? என்பதை தெளிப்படுத்த வேண்டும்.
மு.க.ஸ்டாலின் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்கிறார். ஆனால் கலைஞர் பேச்சுவார்த்தை நடக்கிறது என்கிறார். கூட்டணி அமைப்பதில் அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் அவர்கள் தோல்வி பயத்தில் குழம்பி போய் இருப்பது தெரிய வருகிறது. பா.ஜனதாவை பொறுத்தவரை தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணி தொடர்பாக விஜயகாந்த்தை சந்தித்து பேசும் திட்டம் எதுவும் இல்லை’’என்று திட்டவட்டமாக கூறினார்.