சென்னை:
வாசன் ஹெல்த் கேர் எனப்படும் வாசன் கண் மருத்துவமனையின் பங்குகள் விற்கப்பட்டதில் முறைகேடு நடந்திருக்கிறதா, இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு தொடர்பிருக்கிறதா என்று அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஆம்புலன்ஸ்களை இயக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிகித்சா ஹெல்த் கேர் லிமிடெட் நிறுவனம் மீது மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ.) வழக்கு பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் குற்றம் சுமத்தட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இந்த நிறுவனத்தில் தனக்கு எந்த ஒரு பங்கும் இல்லை என கார்த்தி சிதம்பரம் கூறினார்.
இந்த நிலையில், “வாசன் ஹெல்த் கேர் நிறுவனம் மூலம் ரூ223 கோடி மதிப்பிலான கருப்புப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது; இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு தொடர்பு உள்ளது” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி நாளேடுகளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் எஸ். குருமூர்த்தி எழுதினார்.
மேலும், “இந்த விவகாரம் தொடர்பாக வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்துக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருக்கிறது” என்றும் செய்திகள் வெளியாகின.
வாசன் ஹெல்த் கேர் நிறுவனமானது 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டாக்டர் அருண், அவரது மனைவி மீரா ஆகியோர்தான் இந்த மருத்துவமனையின் முதன்மையான பங்குதாரர்கள்.
இவர்கள் தங்களது 3 லட்சம் பங்குகளை துவாரகநாதன் என்பவருக்கு விற்பனை செய்தனர். துவாரகநாதனோ அதில் 1.5 லட்சம் பங்குகளை அட்வான்டேஜ் ஸ்டேடஜிக் கன்சல்டிங் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு எந்த ஒரு பிரீமியமும் இல்லாமல் விற்பனை செய்தார்.
இந்த அட்வான்டேஜ் ஸ்டேடஜிக் கன்சல்டிங் லிமிடெட் நிறுவனத்தில் 3-இல் 2 பங்கு பங்குகள், அஸ்பிரிட்ஜ் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்துக்குரியவை. அட்வான்டேஜ் ஸ்டேடஜிக் கன்சல்டிங் லிமிடெட் நிறுவனம் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறLு.
எந்த ஒரு பிரீமியமும் இல்லாமல் 1.5 லட்சம் பங்குகளை துவாரகநாதன் விற்பனை செய்தது, சுற்றி வளைத்து கார்த்திக் சிதம்பரத்துக்கு சாதகமாக முடிந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பேசிய அமலாக்கத்துறை அதிகாரிகள், “இந்தியா, இலங்கை, துபாய் ஆகிய நாடுகளில் 175 மருத்துவமனைகளை நடத்தி வருகிற வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்தின் சில பணபரிவர்த்தனைகள் தொடர்பான அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகின்றது. குறிப்பாக 2008ஆம் ஆண்டு அட்வான்டேஜ் ஸ்டேடஜிக் கன்சல்டிங் லிமிடெட் நிறுவனத்துக்கு 1.5 லட்சம் பங்குகள் எப்படி விற்பனை செய்யப்பட்டன என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
இந்த பங்கு பரிமாற்றத்தில் ஈடுபட்ட நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் கார்த்தி சிதம்பரத்துக்கு பங்குகள் இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது” என்றனர்.
மேலும் 2004 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையில் துவாரகாநாதன் தாக்கல் செய்த வருமான வரி கணக்கு விவரங்கள், சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள், கார்த்தி சிதம்பரம் நிறுவனத்துடனான பணபரிவர்த்தனைகள் ஆகியவற்றை தாக்கல் செய்யும்படி அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்தே இந்த விவகாரத்தில் கார்த்திக் சிதம்பரத்தை நோக்கி அமலாக்கப்பிரிவின் கரங்கள் நீண்டுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.