போபால்:

வந்தே மாதரம் நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தே மாதரம் முழக்கமிட வந்த மத்திய பிரதேச பாஜக எம்எல்ஏக்கள், பாடல் முழுமையாகத் தெரியாமல் திருதிருவென விழித்தனர்.

தேசப் பக்திப் பாடாலான வந்தே மாதரம் பாடல் இசைப்பதை ஜனவரி 1-ம் தேதியிலிருந்து மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு நிறுத்தியது. இதற்கு பிரதான எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


நாங்கள் வந்தே மாதரம் பாடலை பாடுவோம். எங்கள் ரத்தத்தில் ஊறியது என பாஜக தேசியத் தலைவர் அமீத் ஷா தெரிவித்தார். வரும் 7-ம் தேதி போபாலில் உள்ள தலைமைச் செயலகம் முன்பு, 109 பாஜக எம்எல்ஏக்களுடன் வந்தே மாதரம் முழக்கமிடப் போவதாக முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பாஜகவின் உள்ளுர் தலைவர்களும் ராமேஸ்வர் ஷர்மா,விஷ்வாஸ் சரங்,கிருஷ்ணா கவுர், சுரேந்திரநாத் சிங் உள்ளிட்ட எம்எல்ஏக்களும் போபாலில் உள்ள வல்லபாய் பட்டேல் பார்க் அருகே புதன்கிழமை திரண்டனர்.
அனைவரும் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடப் போவதாகத் தெரிவித்தனர். ~இந்த தேசத்தில் வாழ வேண்டும் என்றால்,பாரத் மாதா கீ ஜே என்று சொல்லு” என முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் ஒருவருக்கும் வந்தே மாதரம் பாடல் தெரியவில்லை. சில பெண்கள் பாட ஆரம்பித்து சில வரிகளிலேயே நிறுத்தினர். யாருக்கும் முழுப் பாடல் தெரியவில்லை.
இது குறித்து எம்எல்ஏ சுரேந்திரநாத் சிங் பேசும்போது, ஒரு சிலர் மட்டுமே முழுமையாகப் பாடினர். நான் உட்பட பலருக்கும் வந்தே மாதரம் பாடல் முழுமையாகத் தெரியவில்லை என்பது உண்மைதான் என்றார்.