சென்னை: வண்டலூர் வன உயிரின பூங்காவில் மலை பாம்பு முட்டைகள் பொரித்து 36 குட்டிகள் வெளிவந்தன.
சென்னை அருகே உள்ள வண்டலூர் வன உயிரின பூங்காவில் எல்லா வகையான மிருகங்களும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது. அங்குள்ள பாம்புகள் கூடத்தில் 26 இந்திய மலைப்பாம்புகள் உள்ளது.
இவற்றில் ஒரு பெண் மலைப்பாம்பு இனச்சேர்க்கை செய்து 2 மாதத்திற்கு முன்பு 41 முட்டைகளை போட்டது. இந்த முட்டைகளை பெண் மலைப்பாம்பு அடைகாத்து வந்தது.
சுமார் 2 மாத காலம் அடை காக்கப்பட்டு வந்த முட்டைகள் கடந்த 23–ந்தேதி பொரித்தது. முட்டையிலிருந்து 36 பாம்பு குட்டிகள் வெளி வந்தன. ஒவ்வொரு பாம்பு குட்டிகளின் சராசரி நீளம் 45 முதல் 60 செ.மீ உள்ளது. மலைபாம்பு குட்டிகள் சராசரியாக 4 மீட்டர் நீளம் வரை வளரும். முழு வளர்ச்சியடைந்த பாம்பு சுமார் 50 கிலோ வரை எடை இருக்கும். மலைப்பாம்பு குட்டிகள் நன்கு வளர்ந்தவுடன் பாம்புகள் இல்லத்தில் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்படும்.