Kim Jong Un
சியோல்:
ஆயுள் தண்டனை பெற்று வட கொரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனடா பாதிரியாருக்கு குழி தோண்டு வேலை செய்யச் சொல்லி கொடுமை படுத்தும் நிலை உள்ளது.
தென் கொரியாவில் பிறந்தவர் ஹியான் சூ லிம். கனடாவில் குடியேறியவர். கனடாவில் உள்ள பெரிய சர்ச்களில் பாதிரியாராக பணியாற்றி வந்தவர். 60 வயதாகும் இவரை வட கொரியாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
‘‘1997ம் ஆண்டு முதல் வட கொரியாவுக்கு இவர் 100 முறைக்கு மேல் சென்று வந்துள்ளார். அங்கு மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லம் அமைப்பது தொடர்பாக இவர் சென்று வந்ததாக’’ சர்ச் வட்டாரங்கள் தெரிவித்தன. ‘‘தென் கொரியாவில் பிறந்த ஒருவர் மேற்கத்திய நாட்டின் குடியுரிமை பெற்று தங்களது நாட்டிற்குள் வந்ததால் வட கொரியா அரசு இவரை கைது செய்ததாகவும் தெரிவிக்கின்றனர். தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் ஏற்கனவே ஏழாம் பொறுத்தம். தென் கொரியாவுக்கு உதவும் மேற்கத்திய நாடுகள் மீது வட கொரியாவுக்கு இருக்கும் கோபத்தின் வெளிப்பாடாக தான் இந்த பாதிரியார் கைது செய்யப்பட்டதாகவும்’’ சர்ச் வட்டாரங்கள் தெரிவித்தன. இவரை வழக்கு தொடர்பாக அழைத்து வந்தபோது பியோங்கயாங் ஹோட்டலில் வைத்து ‘சிஎன்என்’ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார்.
அப்போது,‘‘ நான் வட கொரியா அரசின் சட்டத்தை மீறியதை ஒப்புக் கொள்கிறேன். வட கொரியா தலைவர்களை விமர்சித்து பேசியது தான் நான் செய்த மிகப் பெரிய குற்றமாம். அதற்காக என்னை சிறையில் தோட்டத்தில் குழி தோண்டு வேலையை தினமும் 8 மணி நேரம் செய்ய சொல்லி கொடுமை படுத்துகின்றனர்.
என்னைச் சுற்றி எந்த சிறை வாசியும் இல்லை. நான் மட்டும் தனியாக இந்த வேலையில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு காவலர் என் அறைக்கு வந்து எழுந்து நில் என்கிறார். மற்றொருவர் வந்து ஏன் நிற்கிறாய்? உட்கார் என்கிறார். இப்படியாக என்னை தினமும் கொடுமைபடுத்துகின்றனர்.அடிப்படையில் நான் கூலி வேலை செய்தவன் இல்லை. அதனால் இந்த வேலை எனக்கு கடினமாக இருக்கிறது’’ என்றார்.
பாதிரியார் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுகிறார். அவர் தினமும் மாத்திரைகளை உட் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்’’ என்று அவரை சிறையில் சந்தித்த சர்ச் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
‘‘பாதிரியாரின் தலை முடி சிறை கைதிகளை போல் வெட்டப்பட்டு, அவரது மார்பில் ‘036’ என கைதி எண் பொறிக்கப்பட்டுள்ளது’’ என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.