இன்று சீமான் புண்ணியத்தில் “வடுகவந்தேறி” என்கிற வார்த்தை சமூகவலைதளங்களில் புழங்க ஆரம்பித்திருக்கிறது. “வடுக வந்தேறி”என்றால் என்ன… வரலாற்று ஆதாரத்துடன் சொல்கிறார் ஜி.மோகனதுரைராஜூ
ஏதோ ஒரு காலத்தில்-ஏதோ ஒரு காரணத்திற்காக,தங்கள் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்த அனைத்து மக்களுமே வந்தேறிகள் தான்.அப்படி வந்தேறிய மக்கள் எங்கு குடியேறுவார்கள்?ஆறுகள்,ஏரிகள், கிணறுகள் என்று நீர்வளம் மிகுந்த பகுதியில் தான் குடியேறுவார்கள்.அங்கு தான் உணவுக்கும்,நீருக்கும்,தொழிலுக் கும் பஞ்சமிருக்காது.உலகமெங்கும் அப்படித்தான் பல நகரங்கள்,நாகரீகங்கள் புதிது புதிதாக முளைத்தன,வளர்ந்தன.ஆற்றங்கரை நாகரீகம் என்று அதற்குப் பெயர்.இதற்கு மிக நல்ல உதாரணம் சென்னை.
இந்த “வடுகர்”என்று தங்களை அழைத்துக் கொள்ளும் மக்கள், பெரும்பான்மையாக வாழும் இடங்கள் எவை தெரியுமா?ஒட்டகங்கள் கூட வாழ முடியாத,வானம் பார்த்த பாலைவனக் கரிசல் பூமி நிலங்களில். இம்மக்கள் வாழும் கிராமங்களைச் சுற்றி இருநூறு,முன்னூறு கிலோமீட்டர்கள் தொலைவிற்கு ஆறுகள்,ஏரிகள்,வாய்க்கால்கள் என எதுவுமே கிடையாது. கரிசல் காடுகளில் கிணறுகளையும் வெட்ட முடியாது.ஆழ்துளைக் கிணறுகளையும் அமைக்க முடியாது.தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காக அம்மக்கள் இன் றளவும் மழையை மட்டுந்தான் நம்பியிருக்கின்றனர். குளங்களை வெட்டி,மழை பொழியும் சமயம் மழை நீரைத் தேக்கி வைக்கின்றனர்.
இந்நிலை இன்று வரை இப்படியே தான் உள்ளது. ஒரு கிராமத்திற்கும் பக்கத்து நகரத்திற்கும் இடையே குறைந்த அளவு இருபத்தைந்து கி.மீ இடைவெளியாவது கன்டிப்பாக இருக்கும். அருகில் நகரங்கள் இல்லாததால்,இந்த 2014 லிலும் கூட பல கிராமங்களுக்கு, முறையான சாலை வசதி கிடையாது. பேருந்து வசதி கிடையாது. இன்றுவரை இக்கிராமங்கள் தனித்தனி தீவுகள் தான்.இன்றுகூட எங்காவது செல்ல-மாட்டுவண்டிகளே இன்றளவும் உதவுகின்றன. மிகச் சிறந்த உதாரணமாக கழுகுமலை அருகிலுள்ள துரைச்சாமிபுரம் என்ற கிராமத்தை கூறலாம்.100 கிலோமீட்டர்கள் சுற்றளவில் கருவேல மரங்களும்,கரிசல் காடுகளுமே சுற்றியிருக்க-தனித்தீவு போன்றே தான் அக்கிராமம் இன்றளவும் உள்ளது. அப்படிப்பட்ட கிராமங்களில் தான் வடுகர்களும், மறவர்களும் காலங்காலமாக ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இதைப் போல் தென்மாவட்டங்களில் ஆயிரக் கணக்கான கிராமங்களை என்னால் காட்ட முடியும்.
இக்காலத்திலேயே இப்படியென்றால்-இங்கெல்லாம் அக்காலத்தில் என்ன வசதி இருந்திருக்கும்?இப்படி இக்கிரா மங்களில் மானாவாரி விவசாயம் செய்து வாழும்,இம்மக்களைத் தான் நடிகர் சீமான் தலைமையிலான மரபியல் விஞ்ஞானிகள்,ஆந்திராவில் இருந்து வந்த வடுக வந்தேறிகள் என்கின்றனர்.
அடப்பதர்களா… வந்தேறிகள் என்றால், இப்படி எந்த வசதிகளும் இல்லாத இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து வந்தா குடியேறுவார்கள்? கருவேல மரங்களும், முட்களும், புதர்களுமா க தரிசாக கிடந்த நிலத்தை திருத்தி விவசாயம் செய்து, ஆடு மாடுகளை மேய்த்து வாழ்பவர்கள் எப்படி வந்தேறிகளாக இருப்பார்கள்? இம்மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் பெரிதும் நம்பியிருப்பது-விவசாயத்தை. அதி லும் மானாவாரி விவசாயத்தை. மானாவாரி என்றால் மழையை மட்டுமே நம்பிய விவசாயம். எப்போது காற்றடிக்கும், எப்போது சாரலடிக்கும், எந்த மழை நின்று பெய்யும்,எந்த மழை போக்கு காட்டும்,எந்த மழையில் விதைக்க வேண்டும்,எப்போது அறுக்க வேண்டும் என்றெல்லாம் மிகத் துல்லியமாகத் தெரிந்தால் மட்டுமே,மானாவாரியில் விவசாயம் செய்ய முடியும்.அதற்கு மண்ணோடும், இயற்கையோடும் இரண்டறக் கலக்க வேண்டும்.காலங்காலமாக இயற்கையைப் படித்து,அதற்கேற்றாற் போன்று விவசாயம் செய்து, அதைத் தங்கள் தலைமுறைகளுக்கு கற்றுத் தந்தால் மட்டுமே மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்ய முடியும்.இதெல்லாம் அம்மண்ணின் பூர்வகுடிகளாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.
இதோ இன்று வரை பல தலைமுறைகளாக, அதே மானாவாரி நிலங்களில் இம்மக்கள் பருத்தியும், சோளமும்,கம்பும், உளுந்தும் விதைத்து விவசாயம் செய்கின்றார் களே? வந்தேறிகள் என்றால் இப்படி மண்ணோடு, இயற்கையோடு இரண்டறக் கலக்க முடியுமா? இயற்கையை துல்லியமாக கணிக்க முடியுமா? இராஜஸ்தானிலிருந்தும், குஜராத்திலிருந்தும், கேரளாவிலி ருந்தும், ஆந்திராவிலிருந்தும் வந்து தமிழ்நாட்டில் குடியேறிய மக்கள் விவசாயமா செய்கிறார்கள்? அதிலும் மானாவாரியிலா செய்கிறார்கள்? வியாபாரம் செய்யும் “வியாபாரிகள்” தான் வந்தேறிகளாக, ஊர் ஊராகச் சென்று குடியேறுவார்கள்.
இயற்கையோடு இணைந்து, மண்ணோடு மண்ணாக கலந்து, மண்ணை மட்டுமே நம்பி வாழும் மானாவாரி வடுக விவசாயி எப்படி வந்தேறியாக இருப்பான்?
இன்னுமொரு வரலாற்று உதாரணம் பார்ப்போம்..
தஞ்சாவூர் வந்தேறிகள்….
பல்லவர்களிடம் தளபதியாக இருந்து, பல போர்களில் பராக்கிரமங்கள் பல செய்து பின்னாட்களில்-கிபி 900 களில் பிற்காலச் சோழப் பேரரசை நிறுவினான் விஜயாலயச் சோழன். மீண்டும் புலிக்கொடி பறந்தது. எழுத்தில் சோழ அரசைத் தோற்றுவித்தான் என்று மிக எளிதாக எழுதிவிட்ட அளவிற்கு எளிதாக இருந்திருக்கவில்லை பிற்கால சோழ அரசின் தோற்றம். அப்படி அமைந்த சோழ அரசிற்கு-அது அமைந்த நாள் முதலாக பழைய எதிரிகளோடு சேர்த்து, புதிது புதிதாக எதிரிகள் முளைத்துக் கொண்டேயிருந்தார்கள். ஒரு பக்கம் எதிரிகள் முளைத்தாலும் மறுபக்கம் சோழ வள நாட்டின் எல்லைகளும் விரிவடைந்து கொண்டே சென்றன. அந்த விரிவாக்கத்திற்கு போரை மட்டுமே ஒரு ஆயுதமாக சோழ மன்னர்கள் பயன்படுத்தவில்லை. மாறாக திருமண பந்தத்தையே மிகப் பெரும் இணைப்புச் சக்தியாகப் பயன்படுத்தி எதிரிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்தனர். சோழ மன்னர்களின் பலதார திருமனங்களுக்கும் இதுவே காரணம்.
குடத்திலிட்ட விளக்காக இருந்த சோழ அரசை-குன்றிலிட்ட விளக்காக மாற்றி, தமிழர்களின் கலாச்சாரத்தை, கலையை, அறிவியலை, பொறியியலை, புலிக்கொடியைப் பாரெங்கும் பறக்கவிட்டவன் இராஜஇராஜ சோழன். அவன் ஆட்சிக்காலத்தில் சாளுக்கிய அரசோடு (இன்றைய கர்நாடகா+ஆந்திரா) -சோழ நாடு ஓயாத போர்களில் ஈடுபட்டிருந்தது. இதனால் அரசின் பெரும்பகுதி செல்வமும், ஆற்றலும் அதற்கே செலவாயிற்று. மதிநுட்பத்தில் சிறந்த இராஜஇராஜ சோழன் இதை விரும்பவில்லை. வலிமையான சாளுக்கிய அரசை எதிர்கொள்ள சில தந்திரங்களைச் செய்தான்.
அதன்படி, கிருஷ்ணா நதிக்கும்-துங்கபத்திரை நதிக்கும் இடைப்பட்ட இன்றைய ஆந்திராவான, கீழைச் சாளுக்கியத்தைச் சேர்ந்த “வேங்கி” நாட்டின் மீது போர் தொடுத்து வர, போர் என்பதையே ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாக கொண்டிருந்த தன் மகன் இராஜேந்திரச் சோழனை அனுப்பினான். வேங்கி நாடு வீழ்ந்தது.
அந்நாட்டரசன் விமாலாதித்தனை கைது செய்து – தஞ்சைக்கு அழைத்து வந்து தன் தந்தை முன் நிறுத்தினான் தனையன். தன் தாய்மொழியைத் தெலுங்காகக் கொண்ட, பெரும் வீரனான விமாலாதித்தனைப் பார்த்தான் இராஜஇராஜன். (இந்த தெலுங்கு கூட ஆதி மொழியான தமிழில் இருந்து-பல்வேறு காலச்சூழ்நிலைகளால் திரிந்த மொழியே.அதாவது இன்றைய சென்னை மொழி போல) அவன் மனதில் அந்தக் கணமே ஒரு திட்டம் உதித்தது. உடனே தன் செல்ல மகளான குந்தவையைத் விமாலாதித்தனுக்கு திருமணம் செய்வித்து-அவன் நாட்டையும் அவனுக்கேத் தந்து, அவனையே அங்கு அரசனாக்கினான். வேங்கி நாட்டு மக்கள் சொல்லொன்னா ஆனந்தத்தில் திளைத்தனர். மன்னனே தன் ஆருயிர் மகளைத் திருமணம் செய்வித்ததைத் தொடர்ந்து இருநாட்டு மக்களும் திருமண உறவுகளை மேற்கொள்ளலாயினர். பெண் கொடுத்து-பெண் எடுத்தனர். இரு மாறுபட்ட கலாச்சாரங்களும், பழக்கவழக்கங்களும், மிக முக்கியமாக சோழ வள நாட்டின் தமிழும்-வேங்கி நாட்டின் தெலுங்கும் ஒன்றோடொன்று இரண்டறக் கலந்தன. அதுவரை மேலைச் சாளுக்கியத்தின் சகோதர நாடாகயிருந்த கீழைச் சாளுக்கியத்தின் வேங்கி நாடு அன்று முதல் சோழப் பேரரசின் அங்கமாயிற்று. இந்த வேங்கி நாட்டிற்குள் தான் இன்றைக்கு ஆந்திராவிலிருக்கும் திருப்பதியும், ஹைதிராபாத்தும்-முழு தெற்கு ஆந்திராவுமே அடங்கும். அவையனைத்துமே கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு வருடங்களாக சோழ நாட்டின் அங்கமாக இருந்த இடங்கள் தான். (1956 ல் மொழிவாரி மாநிலங்கள் பிறக்கும் முன்வரையிலும் கூட சென்னை ராஜதானியில் தான் இருந்தன. அது வேறு கதை. இதுபற்றி விரிவாக பின்னொருமுறை பார்ப்போம்.)
தன் தந்தையின் காலத்திற்குப்பின் அரியணை ஏறிய கங்கையும் கடாரமும் கொண்ட சோழ மன்னன் இராஜேந்திரச் சோழனும்-தன் தந்தையின் கொள்கையையேப் பின்பற்றினான். தன் மகள் அம்மங்கை தேவியை தன் தங்கை மகனான வேங்கி நாட்டு இளவரசனான இராசஇராசேந்திரனுக்கேத் திருமணம் செய்வித்தான். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை அன்றைய சோழப்பேரரசின் தலைநகராம் கங்கை கொண்ட சோழபுரத்தில் சீரோடும்-சிறப்போடும் வளர்ந்தது.கீழைச்சாளுக்கியத்துடனான உறவுகள் எப்படி பலமான வேர்களையும்,விழுதுகளையும் விட்டு வளர்ந்ததோ அதே போல் மேலைச் சாளுக்கியத்துடனான பகையும் வளர்ந்தது. அந்நாட்டுடானான ஓயாத போர்களில் இராஜேந்திரச் சோழனின் காலத்திற்குப் பின் அரியணை ஏறிய அவன் புதல்வர்கள் அனைவரும் வீரமரணம் அடைந்தனர். குறுநில மன்னர்களது கலகம் ஒருபக்கம், உள்நாட்டுக் குழப்பம் மறுபுறம் என சோழ வள நாடு தகுந்த மன்னனின்றி தவித்தது. குடிமக்கள் அல்லலுற்றனர். கலிங்கத்துப்பரணியை இயற்றிய செயங்கொண்டார்,”மறையவர் வேள்விகுன்றி மனுநெறி யனைத்து மாறித்” எனத் தொடங்கும் பாடலில் விவரித்துள்ளார்.
அச்சமயத்தில் தான்-இராஜேந்திர சோழன் மகள் அம்மங்கை தேவிக்கும்-வேங்கிநாட்டு இளவரசனுக்கும் பிறந்த ஆண் குழந்தையை-மக்களின் ஏகோபித்த ஆதரவுடன்-பட்டத்து மன்னனாக முடிசூட்டினர். அந்த மன்னன் தான் பின்னாட்களில் சோழப் பேரரசை சீரோடும்-சிறப்போடுமாக ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்து, குடிமக்களின் பேரன்பைப் பெற்று-அதனாலேயே “சுங்கம் தவிர்த்த சோழன்” என்றழைக்கப்பட்ட-“குலோத்துங்க சோழன்”.அதாவது குலம் தளைக்க வந்த சோழன்.
இப்படி தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் சோழ வள நாட்டிற்கும்-வேங்கி நாட்டின் அரச வம்சங்களுக்குமிடையே திருமண பந்தங்கள் நிகழ்ந்தபோது-சாதாரண குடிமக்களிடையே பெண் கொடுத்து -பெண் எடுக்கும் திருமண உறவுகள் நிகழாமல் இருந்திருக்குமா? உறவுமுறைகள் இல்லாமல் இருந்திருக்குமா? வியாபார வர்த்தகங்கள் நிகழாமல் இருந்திருக்குமா? மொழி கலப்பு, கலாச்சாரக் கலப்பு நிகழாமல் இருந்திருக்குமா? கண்டிப்பாக நிகழ்ந்திருக்கும். ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னாலேயே நடந்த இந்த இனக்கலப்பின் மூலத்தை மரபணு சோதனை செய்து-சோழநாட்டின் மக்கள் யார்? வேங்கி நாட்டு மக்கள் யாரென?எனக் கண்டறிவது சாத்தியமா?அப்படியே கண்டறிந்தாலும் அன்றைய சோழ நாடாகயிருந்த காவிரி டெல்டா மாவட்ட மக்கள் அனைவருமே வந்தேறிகளா?
வரலாறு இப்படியிருக்க-ஏதோ விஜயநகர நாயக்க மன்னர்களது காலத்தில் ஆந்திராவிலிருந்து, தமிழ்நாட்டுக்குள் வந்தவர்களே நாயக்கர்கள் என்றும்,அவர்களே “வடுகர்கள்” என்றும், பலவாறு முடிந்த வரை பிதற்றுகிறார்கள். அது முழுக்க முழுக்க பொய். தமிழ்நாட்டில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தும் பல இன மக்களில் வடுகர்களும் அடங்குவர். ஒரு நாட்டின் பூர்வகுடிகள் யார் தெரியுமா? அந்நாட்டின் மண்ணையும்,இயற்கையையும் உணர்ந்து,புரிந்து-விவசாயம் செய்து வாழ்பவர்களே பூர்வகுடிகள்.வந்தேறிகள் விவசாயிகளாக இருக்க மாட்டார்கள். விவசாயம் செய்து பிழைப்பவர்கள்,அதிலும் இயற்கையை நம்பி,அதைச் சரியாகப் புரிந்து மானாவாரி விவசாயம் செய்து பிழைக்கும் வடுகர்கள் எப்படி வந்தேறிகளாக இருப்பார்கள்?
நாயக்கர் என வடுகர்கள் போட்டுக் கொள்வதாலேயே அவர்கள் வந்தேறிகளா? நாயக்கர்களும் ஆந்திராவின் நாயுடுகளும் ஒன்றா? இல்லவேயில்லை. ஆந்திராவில் எவரும் தங்கள் பெயருக்குப் பின்னால் நாயக்கர் என்று போட்டுக் கொள்வதில்லை. நாயுடு என்று மட்டுந்தான் போட்டுக் கொள்வார்கள். விவசாயத்தையும், கால்நடை மேய்ச்சலையும் தங்கள் குலத்தொழிலாகக் கொண்ட கோனார் இன மக்கள் கூட தங்களை யாதவர்கள் என்று அழைத்துக் கொள்வார்கள். இதே யாதவ மக்கள் உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் என்று பல வடமாநிலங்களில் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை கோனார்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை. எனில் தமிழ்நாட்டின் வீரன் அழகுமுத்து கோனை தந்த கோனார் இனமும் வந்தேறிகளா?
வடதமிழ்நாட்டில் பல இனங்கள்-கடுமையான உழைப்பாளிகளான, வன்னிய மக்கள் கூட தங்களை நாயக்கர்கள் என்று அழைத்துக் கொள்வார்கள்.எனில் வன்னியர்களும் வந்தேறிகளா?
ஒரு காலத்தில் கேரளாவிலிருந்து வந்தவர்களே சானார்கள் என்னும் நாடார்கள் என்று மத்திய அரசின் வரலாற்று ஆவணம் சொல்கிறது.இன்னமும் கேரளாவில் நாடார் என்ற இனம் உள்ளது.எனில் காமராஜரைத் தந்த நாடார் இனமும் மலையாளிகளா? வந்தேறிகளா?
இந்திய இராணுவத்தில் கூட “நாயக்” என்ற பதவியுள்ளது-எனில் அதுவும் நாயக்கர் சாதிக்கான பதவியா?
நாயக்கர் என்பது ஒரு சாதிப் பெயரேயல்ல. அது ஒரு பட்டம். ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை, பதவியை நிர்வகித்தவர்களை மட்டுமே நாயக்கர்கள் என்று குறிப்பிட்டனர். இந்த பட்டத்தை அன்றைக்கு அந்தப் பதவிகளில் இருந்த எந்த இன மக்களும் போட்டுக் கொண்டனர்.அதனால் தான் தமிழ்நாட்டின் சாதிப்பட்டியல்களில் கூட “நாயக்கர்” என்றொரு சாதியே கிடையாது.
இது ஒன்றும் விஜயநகர பேரசர்கள் மட்டும் பயன்படுத்திய பட்டமல்ல. விஜயநகர பேரரசு காலத்தில் தமிழ்நாடு என்றோ,ஆந்திரா என்றோ கிடையவே கிடையாது. பல சிற்றரசுகளின் தொகுப்பாகத்தான் தென் தமிழ்நாடு இருந்திருக்கிறது. அப்படிபட்ட சிற்றரசர்களில் பலர் தங்கள் பெயருக்குப் பின்னால் நாயக்கர்கள் என்று போட்டுக்கொண்டனர். சிவகங்கைச் சீமையின் மருதுபாண்டிய மன்னர்களின் வாரிசின் பெயர் கூட-முத்து வடுக நாத பாண்டியன். எனில் மருதுபாண்டியர்களும் வந்தேறிகளா? விஜயநகர பேரரசிற்கு முன்னமே பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே-இயேசு பிறக்கும் முன்னரே அரசாண்ட மெளரியர்களும்,குப்தர்களும் கூட “நாயக்கர்” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள்.எனில் அந்தப் பதவியில் அக்காலத்தில் இருந்த அனைவருமே வடுகர்களா?
அடிப்படை வரலாற்று அறிவு கொண்ட எவரும்-வடுகர்களை-நாயக்கர் என்ற பதவியோடு சம்பந்தப்படுத்தி-நாயுடு என்ற சாதியோடு தொடர்புபடுத்த மாட்டான். நாயக்கர் என்ற பெயரைச் சாதிப் பெயராகச் சொல்ல மாட்டான்.
சாதியைச் சொல்லி மக்களிடம் பிளவை உண்டாக்கி,அதன் மூலம் தங்கள் கேவல வயிற்றை வளர்க்க நினைக்கும் மூடர்கள் மட்டுமே-“பகுத்தறிவுச் சமதர்ம சமுதாயம்” என்பதை தன் நோக்கமாக கொண்ட திராவிடக் கருத்தியலை எதிர்ப்பார்கள்.அப்படி அந்த மூடர்களின் முட்டாள்தனத்தை எதிர்க்கும் அனைவருமே, “வந்தேறிகள்” தான்.
–