பாட்னா: லோக்ஜன் சக்தி கட்சியின் புதிய தலைவராக 37 வயதான சிராக் பாஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.
பீகார் அரசியலில் முக்கிய அரசியல் புள்ளியான ராம்விலாஸ் பாஸ்வான், ஜனதா தளத்திலிருந்து வந்தவர். தமது தலித் சேனா இயக்கத்தின் மூலம் கூட்டணி அமைத்து போட்டியிட்டவர்.
அதன் பிறகு, 2000ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி லோக் ஜன்சக்தி என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்தார். வி பி சிங், தேவகவுடா, வாஜ்பாய், மன்மோகன் அமைச்சரவையில் இருந்தவர்.
தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியிலும் பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். இந் நிலையில், கட்சியின் புதிய தலைவராக அவரது மகன் சிராக் பஸ்வான் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் நடந்த கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் சிராக் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். சிராக் பஸ்வான் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பீகாரின் ஜமோய் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் அதே தொகுதியில் வென்றார். கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், தமது தந்தை பாஸ்வான், கட்சிக்கு வழிகாட்டியாக திகழ்வார் என்றார்.