லண்டன்:
இங்கிலாந்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. இதில் லண்டன் மாநகர வேட்பாளராக தொழிலாளர் கட்சி சார்பில் சாதிக் கான் என்பவர் போட்டியிடுகிறார். இவரது தந்தை பாகிஸ்தானிலிருந்து பிரிட்டனில் குடியேறியவர். பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடித்தட்டு மக்கள் நலனை மறந்து, மெல்ல மெல்ல மேல்தட்டினர் பக்கம் சாய்ந்துகொண்டிருந்த தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக தீவிர இடதுசாரி சிந்தனையாளர் ஜெரெமி கோர்பின் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் ஒரு முஸ்லீமை களத்தில் அக் கட்சி நிறுத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்து பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது. ஆனாலும் லண்டனில் கணிசமான வாக்குக்களைப் பெற்றது. போட்டி கட்சியான கன்சர்வடிவ்களை விட பத்து சதம் வாக்குகளை கூடுதலாக பெற்றது. அந்த அளவு லண்டன் பகுதி மக்களை தொழிலாளர் கட்சி ஈர்த்ததற்கு சாதிக் கானின் தீவிர பிரச்சாரமும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. சாதிக் பற்றி கூடுதலாக ஒரு தகவல்: இவர், ஓரின திருமணத்தை ஆதரிப்பவர்.
பெரும்பாலான மக்களின் ஆதரவுடன் லண்டன் மேயராக இவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள்.