ஏகத்துக்கு எதிர்பார்ப்பை கிளப்பிய “புலி” படம் ரசிகர்களின் ஆதரவை பெறவில்லை. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் எதிர்பார்த்த ரிசல்ட் இல்லை.
இதனால் விஜய் மற்றும் யூனிட் மூட் அவுட் ஆகி முடங்கியது. இந்த நிலையில்தான், விஜய் நலம் விரும்பிகள், “ இப்படி சோர்ந்து போனா எப்படி? ஏதாவது பண்ணனும்” என்று ரூம் போட்டும் போடாமலும் பலவிதமாக ஜிந்தித்தார்கள்.
அதன் விளைவுதான், ரஜினியை படம் பார்க்க வைத்தோ, வைக்காமலோ படத்தை பாராட்டி “வாய்ஸ்” கொடுக்க வேண்டும் என்பது.
ரஜினியும் உடன்பட்டு, “ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் இருக்கு.. விஜய் அசத்திட்டாரு..” என்றெல்லாம் போட்டுத்தள்ளினார்.
ஆனாலும் புலி வசூல் உறுமியபாட்டைக்காணோம்.. அதே முனகல் சத்தம்தான் கேட்கிறது.
“ரசிகர்களுக்கு பிடிக்கலைனா ரஜினி படத்தையே கவுத்துருவாங்க.. இதில இவர் சொல்லி படம் பாக்கப்போறாங்களா” என்று முணுமுணுப்புகள் கிளம்பியதுதான் மிச்சம்.
இப்போது அடுத்த காட்சி.
புலி பட ரிலீஸின் போது, படம் பார்க்கச் சென்ற சவுந்தர்ராஜன், உதயகுமார் ஆகிய இரு இளைஞர்கள் லாரி மோதி பலியானார்கள். தாம்பரம் அருகே மணிமங்கலத்தை சேர்ந்த இவர்களது வீட்டுக்கு இன்று காலை திடுமென சென்று துக்கம் விசாரித்தார் விஜய். கொஞ்சம் பண உதவியும் செய்ததாக பேச்சு. இப்போது இந்த துக்க விசாரிப்பு ஸ்டில்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.