
இயக்குநர் ராம்கோபால் வர்மா ரஜினி பத்ம விபூஷண் வாங்கியதையடுத்து தனது ட்விட்டர் கணக்கில் ரஜினியைப் பாராட்டி ட்விட் போட நினைத்தார். நினைத்தபடி போடவும் செய்தார். ஆனால் அவரது பாராட்டால் ரஜினி ரசிகர்கள் ஆத்திரமடைந்திருக்கின்றனர்.
ஏப்ரல் 16 அன்று ட்விட்டரில் ரஜினியும் எமிஜாக்சனும் இருக்கும் புகைப்படத்தைப் போட்டு, “இந்த மனிதர் மிகப் பெரிய ஸ்டார். ஸ்டாராகத் திகழ்வதற்கு அழகான தோற்றம் இன்றியமையாதது எனும் எண்ணத்தை முற்றிலும் காலிசெய்துவிட்டார். அவர் அழகான தோற்றமுடையவர் இல்லை, சிக்ஸ் பேக் கிடையாது, குள்ளம் அத்தோடு கட்டான உடல் கிடையாது, வெறுமனே இரண்டொரு டான்ஸ் மூவ்மெண்டுகளே தெரியும். உலகின் மகத்தான உளவியல் நிபுணர்களும் ரஜினி எனும் ஆச்சரியத்தை விளக்குவதில் திணறிப்போவார்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.
ரஜினி தோற்றத்தைக் குறித்த அவரது பதிவுகள் ரஜினி ரசிகர்களிடையே ஆத்திரத்தைத் தூண்டியுள்ளன. ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பதிலடி தரத்தொடங்கினர். மீண்டும் இதுபோல் கமெண்ட் செய்தால் ராம்கோபால் வர்மாவின் ட்விட்டர் கணக்கை முடக்கச்சொல்லி ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களும் ட்விட்டருக்கு புகார் செய்வோம் என்று கூறத்தொடங்கியுனர்.
இதற்குப் பதிலளிக்கும்விதமாக ராம்கோபால்வர்மா ரஜினி பற்றிய வீடியோ ஒன்றைப் போட்டு, “ரஜினியின் முட்டாள்தனமான ரசிகர்கள், என் ட்விட் ரஜினியைப் பாராட்டுகிறது என்றுகூட உணராதவர்கள். ரஜினியே தன்னையே பகடிசெய்வார், வேடிக்கை செய்வார் என்பதை அறியாதவர்கள்” என்று ட்விட் செய்திருக்கிறார். எனினும் பெருவாரியான ரஜினி ரசிகர்களின் ஆத்திரத்தால், ரஜினியின் தோற்றம் குறித்துப் போட்ட ட்விட்டை மட்டும், தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியிருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel