திருப்பூர்:
ரஜினி, சகாயம் போன்றோர் அரசியலுக்கு வரவேண்டும் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பழ கருப்பையா அழைப்பு விடுத்திருக்கிறார்.
திருப்பூரில் நடைபெற்ற 13-வது புத்தக கண்காட்சி கருத்தரங்கில் கலந்து கொண்டு ‘அரசியல் அறம்’ என்ற தலைப்பில் பழ. கருப்பையா உரையாற்றினார்.
அப்போது அவர், “இன்றைக்கு அறம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விட்டது. மனிதனை அறம் உள்ளவனாக உருகவாக்கினால், அவன் ஒழுங்குபட்டிருப்பான். ஆனால் நாம், சட்டத்துக்கு பயப்படுகிறவர்களாக மனிதர்களை உருவாக்கி இருக்கிறோம். சட்டத்தை சார்ந்து இருக்கும் அரசியல் தோற்கும்.
இன்றைக்கு அரசியல் என்பது தொழில் என்றாகி விட்டது. பதவியை பிடிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் அரசியலுக்கு வருகிறார்கள்.
லஞ்சம் இன்றைக்கு வாழ்க்கை முறையாக மாறி விட்டது. காமராஜர் இறந்த போதே மரணம் அடைந்திருக்க வேண்டும் அல்லது அரசியலை விட்டு விலகியிருக்க வேண்டும்.
இன்றைய அரசியலில் நேர்மையாக நடக்கிறவன், ஒதுக்கப்படுகிறான். ஆனாலும் அறத்தை தாங்கி நிற்கும் அரசியல் தோற்காது” என்று பழ.கருப்பையா பேசினார்.
பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பேசிய பழ.கருப்பையாவிடம், ‘நீங்கள் எந்த கட்சியில் சேர இருக்கிறீர்கள்?’ எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “தேர்தலுக்கு முன்பு அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே, யோசித்து முடிவு செய்வேன். என் வீடு மீது நடந்த தாக்குதலில் குற்றவாளிகளை தப்ப விட்டு விட்டனர். மையப்படுத்தி ஊழல் செய்வது என்ற முறையை கண்டறிந்தது அ.தி.மு.க. தான்” என்றார்.
மேலும், ‘ரஜினிகாந்த், சகாயம் போன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். ஆனால் அவர்கள் அரசியலுக்கு ஏன் வர மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை’ என்றும் அவர் தெரிவித்தார். .