திரைக்கு வராத உண்மைகள் – 1
ரஜினிகாந்தை முதன் முதலில் கன்னட படத்தில் அறிமுகப்படுத்தியவர் நம்மூர் பாலன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கே.ஆர். பாலன். எம். ஜி.ஆர். நடித்த தாயின் மடியில் உட்பட பல படங்களைத் தயாரித்தவர். “வளையல் சத்தம்”, “தப்புக்கணக்கு” போன்ற படங்களை இறுதிக்காலத்தில் தாயரித்து வெளியிட்டு காலமாகிவிட்டார்.
ரஜினிகாந்த், “அபூர்வராகங்கள்” படத்தில அறிமுக நடிகராக ஒரே ஒரு காட்சியின் நடித்திருந்தார். அந்த படத்தின் டைட்டிலில் அவர் பெயர், சிவாஜி ராவ் என்றுதான் இருந்ததாம். அந்தப் படத்தை இயக்கிய கே.பாலசந்தர் அப்போது ரஜினிகாந்த் என்று பெயரிடவில்லை.
ஒரே ஒரு காட்சியில் நடிப்பவருக்கு தனியாக ஒரு புதுப்பெயர் எதற்கு என்று நினைத்திருக்கலாம்.
அந்தபடம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியும்கூட, அடுத்து எந்த ஒரு படத்திலும் நடிக்க ரஜினிக்கு வாய்ப்பு வரவில்லை…. அடுத்து அதே கே. பாலசந்தர், மூன்று முடிச்சு படம் தொடங்கி அதிலும் ரஜினிகாந்தை நடிக்கவைக்கும் வரை!
அந்த இடைக்காலத்தில் ரஜினி படம் எதுவும் இன்றி வீட்டில்தான் இருந்தார். வீடு என்றால் ஒரு வீட்டு மொட்டை மாடியில் கீற்றுக்கொட்டகை.
முதல் பட வாய்ப்பு கொடுத்த டைரக்டரேதான் இரண்டாவது பட வாய்ப்பும் கொடுக்க வேண்டிய பரிதாப நிலையில் இருந்த ரஜினி, அதுவரை சாப்பாட்டுக்கு என்ன செய்வார்?
பாலன் பிக்சர்ஸ் கே.ஆர். பாலனுக்கு ஒரு மைத்துனர். அதாவது, மனைவியின் தம்பி. பெயர் – வேலன். இவரும், ரஜினியும் பிலிம்சேம்பர் நடத்திய ஆக்டிங் கோர்ஸில் ஒன்றாக படித்தவர்கள்.
அந்த வகையில் வேலன் மூலம் பாலனுக்கு அறிமுகமான ரஜினி, பாலன் பிக்சர்ஸ் படங்களில் வாய்ப்பு கேட்டு வற்புறுத்தி வந்தார்.
அப்போது பாலன் பிக்சர்ஸ் கன்னட படங்கள்தான் எடுத்து வந்தது. பாலன், தி.மு.க. காரர். கருணாநிதிக்கு உறவினரும்கூட. அப்போது எம்.ஜி.ஆர், தனிக்கட்சி ( அ.தி.மு.க.) தொடங்கி தி.மு.க.வை தீவிரமாக எதிர்த்து வந்தார்.
பாலன் உள்ளிட்ட தி.மு.க. சினிமா புள்ளிகள், சென்னையில் படப்பிடிப்பு நடத்த தயங்கினர். காரணம் சென்னையில் என்னதான் ஆட்சி அதிகாரம் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் கையில் இருந்தபோதிலும் தமிழ் சினிமா உலகம் எம்.ஜி.ஆரின் கட்டுப்பாட்டில் இருந்தது.
ஸ்டுடியோ அதிபர்கள் எம்.ஜி.ஆர். சொல்லுக்கு கட்டுப்பட்டவர்களாக விளங்கினர். சினிமாவுக்கு நிதி உதவி செய்யும் பெரிய பைனான்சியர்கள் எல்லோரும் எம்.ஜி. ஆரிடம் இருந்தனர். அவர்கள்தான் மற்ற சிறு படங்களுக்கும் பைனான்ஸ் செய்து வந்தனர். இவர்களது படப்பிடிப்பு நடந்தால்தான் ஸ்டூடியோக்களுக்கு பிழைப்பு. படம் முடிவடைந்து ரிலீஸுக்கு தாயரானால்தான் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் தொழில். இப்படி ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டு, எல்லோரது லகானும் எம்.ஜி.ஆர். கையில்!
எம்.ஜி.ஆர். நினைத்தால், ஸ்டூடியோக்களில் தி.மு.க. புள்ளிகள் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு இடையூறு செய்ய முடியும். ஸ்டூடியோ தொழிலாளர்கள் பலர் எம்.ஜி.ஆர். விசுவாசிகள். எம்.ஜி.ஆரின் உத்தரவுகளை ரகசியமாக நிறைவேற்றக்கூடியவர்கள். ஸ்டூடியோ நிர்வாகிகள் சிலர் எம்.ஜி.ஆரிடமும் ரகசியமாக ஒரு சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தனர். இது ஸ்டூடியோ முதலாளிகளுக்குத் தெரியாது.
இதையெல்லாம் உத்தேசித்து அன்று தி.மு.க. தயாரிப்பாளர்கள் பலரும் பெங்களூர் சென்று கன்னட படங்கள்தான் தயாரித்தனர். அன்றைய முதல்வர் கருணாநிதியின் அக்காள் மகன் அமிர்தம்கூட, கர்நாடகா சென்று கன்னட படங்கள்தான் டைரக்ட் செய்துவந்தார் என்றாலே மற்றவர் நிலைமையை யோசியுங்கள்.
அப்போது கன்னட முதல்வராக இருந்தவர் குண்டுராவ். அவர், தமிழக முதல்வர் கருணாநிதியின் நண்பராக விளங்கினார். இதனால் கர்நாடக மாநிலத்தில் பாதுகாப்பாக படப்பிடிப்பு நடத்த முடிந்தது தி.மு.க. ஆதரவாளர்களுக்கு!
இந்த வகையில் அன்று பாலன் பிக்சர்ஸ், பாலனும் கன்னடப் படங்கள் தயாரித்து வந்தார்.
“அபூர்வராகங்கள்” படத்துக்குப் பிறகு படம் இல்லாமல் “புவ்வா”வுக்கு லாட்டரி அடித்து வந்த ரஜினிகாந்தை அழைத்து தனது கன்னட படத்தில் நடிக்க சான்ஸ் கொடுத்தார் பாலன். படத்தில் ஒரு சிறு வேடம். அதற்கு ரஜினிக்கு அவர் பேசிய சம்பளம் 1500 ரூபாய்.
ரஜினிக்கு இரட்டிப்பு சந்தோஷம். ஏன்?
கன்னடக்காரரான ரஜினியின் ஊரார், உறவினர், நண்பர்கள் எல்லோரும் கர்நாடக மாநிலவத்தவர்தானே! அப்படி இருக்க, அவர் தமிழ்நாட்டில் தமிழ் படத்தில் நடித்தால் யாருக்குத் தெரியப்போகிறது? ஒரு சினிமா நடிகனுக்கு தன்னை நாலு பேருக்கு தெரிகிறது, தன்னைக் காண கூட்டம் திரளுகிறது என்பதில்தானே பெருமை! காசு, பணம் அப்புறம்தானே!
மதுரைக்கார வடிவேலு பஞ்சாபி, உருது, வங்காள மொழிகளில் பத்து படம் நடித்தாலும் அவர் மதுரைக்கு வந்தால் அவரை யாருக்குத் தெரியும்? தமிழில் நடித்து மதுரையில் படம் ஓடினால்தானே அவருக்குப் புகழ்?
அதுபோல் ரஜினிக்கும் தனது தாய்மொழியான கன்னடத்தில் பேசி நடிப்பதில், அதை தன் நாட்டு மக்கள் பார்த்து ரசிக்கப்போவதில் ஒரு பெருமிதம்.
மறுநாள் பெங்களூரில் படப்பிடிப்பு. ரஜினி காம்பினேஷனில் நடிக்கப்போகும் நடிகர் நடிகைகள் பெங்களூரில் இருக்கிறார்கள். எல்லோரும் கன்னட நடிகர்கள். மறுநாள் காலை ஏழு மணிக்கு பெங்களூரில் இருந்தாக வேண்டும். இரவு பதினோரு மணி ஆகிவிட்டது. அப்போது அந்த நேரத்தில் ரயிலோ, பஸ்ஸோ கிடையாது.
என்ன செய்வது?
”ஏதேனும் லாரி கிடைத்தால் ஏறிப்போய்விடுகிறேன்” என்று தயாரிப்பாளர் பாலனிடம் சொன்னார் ரஜினி.
“எந்த லாரியில் ஏறிப்போவாய். நீ லாரி பிடித்து பெங்களூர் போயக்கொண்டிருக்கிறாரய் என்பது எனக்கு எப்படித் தெரியும்? படப்பிடிப்பு குழுவினருக்கு, நான் நடிகரை அனுப்பிவிட்டேன். வந்துகொண்டிருக்கிறார் என்று எப்படி உறுதியாகத் தகவல் சொல்ல முடியும்? லாரி எதுவும் கிடைக்கவில்லை என்று நீ விடியற்காலை திரும்ப வந்து நின்றால் அங்கே உனக்காக காத்திருப்பவர்கள் எப்படி படப்பிடிப்பைத் தொடங்க முடியும்?” என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளில் தனது கவலையைத் தெரிவித்தார் பாலன். (செல்போன் இல்லாத காலம் என்பதையும் நினைவில் கொள்க!)
பாலனின் தொடர் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழித்தார் ரஜினி.
பாலன், “சரி, ஒரு ஆளை உன்னுடன் அனுப்புகிறேன். நீ பெங்களூர் போக லாரி ஏற்றி அனுப்பிவிட்டு வந்து எனக்கு தகவல் சொல்வார்” என்றார்.
அவ்வாறே, பெங்களூர் போய் இரண்டொரு நாள் நடித்துவிட்டுத் திரும்பினார் ரஜினி.
ஆனால் நாம் இங்கே சொல்ல வந்த விஷயம் அதுவல்ல.
ஆயிரத்து ஐநூறு ரூபாய் ரஜினிக்கு சம்பளம் பேசிய பாலன், அட்வான்ஸாக கொடுத்த தொகை ரூபாய் நூறுதான்.
ரஜினிகாந்த் அப்போது ராயப்பேட்டையில் மவ்பரிஸ் ரோட்டை (இன்றைய டி.டி.கே. சாலை) அடுத்துள்ள கணபதி தெருவில் ஒரு வீட்டு மாடியில் கீற்றுக்கொட்டகையில் குடியிருந்தார்.. தன் “சினிமா முயற்சி” நண்பர்கள் சிலருடன்.
முரட்டுக்காளை படம் வரையில்கூட அவர் முகவரி அதுதான். தற்காலிகமாக ஓட்டல் அறை வாசம்.
படப்பிடிப்பு முடந்தும் கூட கே.ஆர். பாலன் ரஜினிக்கு தர வேண்டிய சம்பள பாக்கியைத் தரவில்லை. காரணம், பாலன் குடும்பத்தாருடன் ரஜினிக்கு வெகுநாள் பழக்கம். அதனால் “சம்பள பாக்கியை கொடு” என்று இவரும் உரிமையாக கேட்க முடியவில்லை. அதே உரிமையில் பாலனும் பாக்கியை “பைசல்” பண்ணவில்லை.
பாவம், ரஜினி என்ன செய்வார்!
பாலனின் படக்கம்பெனி அலுவலகத்துக்கு வருவார். பாலனிடம் நூறு ரூபாய் கேட்பார்.
பாலனும் கொடுப்பார். அதுவும் எப்போது? ரஜினி காலையில் வந்து நூறு ரூபாய் கேட்டால், அதை பாலன் கொடுக்க மாலை ஆறு மணி ஆகிவிடும்.
வாங்கிக்கொண்டு அவசரமாகப் புறப்படுவார் ரஜினி.
அடுத்த நான்கைந்து நாட்களில் ரஜினி மீண்டும் வருவார். அதே நூறு ரூபாய் கோரிக்கை. அதே மாலை ஆறு மணி. நூறு ரூபாய் கொடுக்கப்படும். “வவுச்சர் பேமெண்ட்”தான்.
“இப்படி நூறு ரூபாய் வாங்கிக்கொண்டு பரபரப்பாகப் புறப்படுகிறானே.. ஒரு வேளை மது அருந்துவதற்காக வாங்கிக்கொண்டு போகிறானோ?” – சந்தேகப்பட்ட பாலன், ஒரு நாள் ரஜினி பணத்துடன் புறப்பட்ட உடனேயே தனது ஆள் ஒருவரை ரகசியமாக பின்தொடர்ந்து சென்று கண்காணித்து வரும்படி அனுப்பினார்.
ரஜினி நூறு ரூபாயை பெற்றுக்கொண்டு பஸ் ஏறிச் சென்றார். ராயப்பேட்டையில் இறங்கி தான் குடியிருந்த தெருவிற்குள் நுழைந்ததும் அங்கிருந்த ஒரு மளிகைக்கடைக்குச் சென்றார். தன் பேண்ட் பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த “மஞ்சப்பை”யை எடுத்தார்: உதறினார். அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய், எண்ணெய், கொஞ்சம் காய்கறி வாங்கினார்.
நூறு ரூபாயைக் கொடுத்து, பாக்கிப்பணத்தை வாங்கிக்கொண்டு நடந்தார். மாடிப்படியேறி தனது கீற்றுக்கொட்டகை “ஜாகை”க்குள் நுழைந்தார்.
அதுவரை பார்த்துவிட்டு திரும்பி வந்து, நடந்ததைப் பாலனிடம் சொன்னார் “உளவாளி”!
“அடடா! ரொம்ப கஷ்டப்படுறான்! இருந்தாலும் அதை எல்லாம் நம்மிடம் காட்டிக்கொள்ளாமல், போராடறான். அங்கே அவனுடன் அவன் சிநேகிதகாரங்களும் இருக்கிறார்கள். சமைத்து எல்லோருமாகச் சேர்ந்து சாப்பிடுகிறார்கள் போலிருக்கிறது! அந்த மளிகை சாமானும், பாக்கி பணமும் நான்கைந்து நாள் வரும் போலிருக்கிறது. அது தீர்ந்ததும் அடுத்த 100 ரூபாய்க்கு வந்துவிடுகிறான். இப்போதுதான் விபரம் புரிகிறது.
அவன் மட்டும் சமைத்து சாப்பிட்டால் 100 ரூபாய் மளிகை சாமானிலேயே ஒரு மாதம் சாப்பிடலாம். (அக்காலத்து விலைவாசி!) அவனது சிநேகிதர்களுக்கும் அவன் சாப்பாடு போடுகிறான். அதனால்தான் வாரா வாரம் 100 ரூபாய்க்கு இங்கே வந்து நின்று விடுகிறான் போலிருக்கிறது” என்றார் பாலன்.
ரஜினியின் நண்பர்களான நடிகர் கே.நட்ராஜ் உள்ளிட்ட ஒரு சிலர் அப்போது அந்த கீற்றுக்கொட்டகை வாசஸ்தலத்தில அவருடன் தங்கியிருந்தார்களாம்.