saadanai_03
 
 
புதுவையில் டந்த கால வரலாற்றில் பல தலைவர்கள் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வந்துள்ளனர். அவர்கள் யாராலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. ஆனால் ரங்கசாமி தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து சாதனை படைத்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு 2 மாதத்துக்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். இந்த கட்சி அ.தி.மு.க., தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், அ.தி.மு.க. 12 தொகுதிகளிலும், தே.மு.தி.க. 1 தொகுதியிலும் போட்டியிட்டது. இதில் என்.ஆர். காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், அ.தி.மு.க. 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சுயேச்சை எம்.எல்.ஏ. ஆதரவுடன் என்.ஆர். காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைத்தது.
இந்த தடவை என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடங்கி 2–வது முறையாக தேர்தலை சந்திக்கிறது. இப்போதும் அந்த கட்சி ஆட்சியை பிடிக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பாரதீயஜனதா கூட்டணியில் இடம் பெற்று போட்டியிட்டது. இதில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதன் மூலம் புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் தொடர்ந்து செல்வாக்குடன் இருப்பதை அந்த கட்சி நிரூபித்து காட்டியது.
அதேபோல இந்த சட்டசபை தேர்தலிலும் செல்வாக்கை நிரூபித்து காட்டுமா? என்பது தான் இப்போதைய கேள்வி?
ரங்கசாமி ஆட்சி மீது மக்களுக்கு பெரிய அளவில் அதிருப்தி இருப்பதாக தெரியவில்லை. எனவே அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். அவர் எப்படி தேர்தல் வியூகத்தை வகுக்க போகிறார் என்பதை பொறுத்தே வெற்றி தோல்வி அமையும்.
ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். எல்லாவற்றையும் ஜோதிடம் பார்த்தே செய்வது அவருடைய வழக்கம். இப்போதும் ஒவ்வொரு விஷயத்திலும் ஜோதிடத்தின் அடிப்படியிலேயே அடியெடுத்து வைக்கிறார். பல்வேறு கோவில்களுக்கும் சென்று வருகிறார். இது உரிய பலனை கொடுக்கும், மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்.