yuvaraj
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர், கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிப்பாளையத்தில் ரயில் பாதையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இவ்வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை உள்பட 17 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில், யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்ற சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், யுவராஜ் வேலூர் சிறையிலும் மற்ற 6 பேரும் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செல்வராஜ், ஜோதிமணி (பெண்), ரவி என்ற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஷ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவ் வழக்கு தொடர்பாக 1,318 பக்க குற்றப்பத்திரிக்கை நகல் யுவராஜ் உள்ளிட்ட 17 பேருக்கும் கடந்த 3-ஆம் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து, இவ் வழக்கு விசாரணை நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் இருந்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
ஜாமீனில் விடுவிக்கக் கோரி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் யுவராஜ் மனுத் தாக்கல் செய்தார். இம் மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெறும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, வேலூர் சிறையில் உள்ள யுவராஜிடம் காணொலிக் காட்சி முறையில் நீதிபதி விசாரணை நடத்தினார். அரசு தரப்பில் யுவராஜை பிணையில் விடுவிக்க எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி எஸ்.ராமதிலகம், யுவராஜ் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.