டில்லி: நரேந்திரமோடி அளவுக்கு பலவீனமான பிரதமரை இதற்கு முன் பார்த்ததில்லை என்று பாஜக தலைவர்களில் ஒருவரான அருண்ஷோரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஷோரி டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசினார். அப்போது அவர், “’பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநில முதலமைச்சர்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் மோதல் போக்கை கடைபிடிக்கிறது. பத்திரிகைகளில் தலைமைப்புச் செய்தியாக இடம் பெறுவதையே பொருளாதார நிர்வாகம் என்று மோடி அரசு நம்பிக்கொண்டிருக்கிறது.
மோடி அரசின் இந்த போக்கு ஒரு போதும் நல்ல பலன்களை தராது. நரேந்திர மோடி தலைமையிலான பிரதமர் அலுவலகத்தைப் போல் மிகவும் பலவீனமான ஒன்றை இதுவரை நான் பார்த்தே இல்லை.
மோடி அரசை விட, மன்மோகன் சிங் தலைமையிலான அரசே மேலானது என மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர்” என்று பேசினார்.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஷோரியே நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.