“மோடி அலை ஓயத் துவங்கிவிட்டதா” என்ற கேள்வி பல தரப்பிலிருந்தும் எழ ஆரம்பித்திருக்கிறது. “பீஹாரில் அப்படித்தான் தோன்றுகிறது” என்கிறார் பிரபல ராய்ட்டர் செய்தி நிறுவன நிருபர் பிரவீண் ராய்.
1.நிதிஷ்-லல்லுவிற்கெதிரான, தீவிர எதிர்மறை பிரச்சாரம் மக்களை முகம் சுளிக்கவைத்திருக்கிறது.
2.நாட்டில் விலைவாசி குறைவதாக இல்லை, விவசாயிகள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வேதும் காணப்படவில்லை, நாடாளுமன்றத் தேர்தல்கள் போது அள்ளி வீசிய வாக்குறுதிகள் எதையுமே மோடியால் நிறைவேற்றமுடியவில்லை.
3.பாஜக தலைமையிலான தேசீய ஜனநாயகக் கூட்டணி உள்ளூர் தலைவர்களான நிதிஷ் குமாரையும் லல்லுபிரசாத் யாதவையும் கிண்டல் செய்து, வில்லன்களாக சித்தரித்து, ஏதோ மோடி மகா புருஷர் போல காட்ட முயற்சிக்க, இத் தேர்தல்கள் பீஹாரிகளுக்கும் வெளி மாநிலத்தவர்க்குமிடையிலான போட்டி என்ற ஒரு கருத்து உருவாகியிருக்கிறது.
4.அண்மையில் நாடளவில் நடைபெற்றிருக்கும் மாட்டிறைச்சி மற்றும் சிறுபான்மையினருக்கெதிரான சம்பவங்களும் பாஜகவின் வீச்சை கணிசமாக மட்டுப்படுத்தும்.
டில்லியில் பல்பு வாங்கிய அளவு ஒரே அடியாக கவிழ்ந்துவிடப்போவதில்லைதான். ஆனாலும் மோடிவித்தை செல்லுபடியாகப் போவதில்லை, வெல்லப்போவது நிதிஷ் தலைமையிலான கூட்டணியே எனப் பலரும் கருதுவதைத்தான் ராய்ட்டர் நிருபர் உறுதிப்படுத்துகிறார்.
இதுவரை நடந்த இரண்டு கட்டங்களிலும் பாஜகவிற்கு பின்னடைவு என அக்கட்சித் தலைவர்களே கருதுவதாகவும், முன்னெச்சரிக்கையாக மோடி, அமித் ஷா ஃப்ளெக்சி பானர்கள் அகற்றப்பட்டு உள்ளூர் தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தோற்றுவிட்டால் அவர்கள் மீது பழியைப் போட்டுவிடலாமே
பாஜக தோற்றுவிட்டால் மோடியின் கரங்கள் பலவீனமாகும், சங்க பரிவாரம் ஆக்ரோஷத்துடன் செயல்படும் நாட்டில் பூசல்களும் அதிகரிக்கும் எனவும் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இன்று மூன்றாவது கட்டத் தேர்தல். நவம்பர் 5ஆம் நாளோடு நிறைவு பெறுகிறது நவம்பர் 8 அன்று முடிவுகள். பார்ப்போமே என்ன நடக்கிறதென்று.
– த.நா.கோபாலன்