கோரக்பூர்

மோடியை எதிர்ப்பவர்களை கோரக்பூர் மக்களவை தொகுதியின் புதிய உறுப்பினர் நடிகர் ரவி கிஷன் கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மக்களவை தொகுதியில் ரவீந்திர சியாம்நாராயண் சுக்லா என அழைக்கப்படும் ர்வி கிஷன் பாஜக சார்பில் போட்டியிட்டார். இவர் போஜ்புரி மொழியின் பிரபல நடிகர் ஆவார். இவர் ஏற்கனவே 2014 ஆம் வருட மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் உத்திர பிரதேச மாநிலம் ஜவுன்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அதன் பிறகு அவர் பாஜகவில் சேர்ந்தார். ஆயினும் அவருக்கு மற்ற கட்சிகள் நடிகர் என்பதை தவிர வேறு அங்கீகாரம் அளிக்கவில்லை. அதை ஒட்டி அவர் அப்போதைய உ பி முதல்வரான அகிலேஷ் யாதவை பல முறை சந்தித்து மக்கள் நலனுக்காக கோரிக்கை விடுத்து தம்மை அரசியல் வாதி என நிரூபிக்க முயன்றுள்ளார். தற்போது இவர் கோரக்பூர் தொகுதியில் வென்றுள்ளார்.

ரவி கிஷன், “நான் கோரக்பூர் தொகுதிக்கு இதுவரை எந்த ஒரு நலத்திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.  உ.பி முதல்வர் யோகி மற்றும் பிரதமர் மோடியின் பெயரை சொல்லி வாக்கு சேகரித்து நான் வெற்றி பெற்றுள்ளேன். எனது வெற்றிக்கு மட்டும் அல்ல நாட்டின் முன்னேற்றத்துக்கும் மோடியே காரணம் ஆவார். அவரை பற்றி தவறாக பேசுபவர்கள் தேச துரோகிகளாகவே கருதப் படுவார்கள்” என கூறி உள்ளார்.