மைசூரு

நேற்று மைசூருவில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் ரோகிணி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் சாரா மகேஷ் ஆகியோருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மைசூரு மாவட்ட ஆட்சியர் ரோகிணி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் சாரா மகேஷ் ஆகியோரிடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது.   இந்த பனிப்போர் நேற்று இருவருக்கும் இடையே நடந்த கடும் வாக்குவாதத்தில் மேலும் அதிகரித்துள்ளது.  நேற்று மைசூருவில் நடந்த சட்டப்பேரவை ஆவண ஆய்வுக் குழுக் கூட்டம் நடந்தது.  இதில் தணிக்கை குழு தலைவர் சாரா மகேஷ் கலந்துக் கொண்டார்.

அந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ரோகிணி வந்துள்ளார். அவருக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்படாததால் அவர் அதிகாரிகளின் வரிசையில் அமர்ந்துக் கொண்டார்.  அவர் தனது உரையை முகக் கவசம் அணிந்து பேசி உள்ளார். இதற்குச் சாரா மகேஷ் தங்களுக்குச் சரியாகக் கேட்கவில்லை எனவும் முகக் கவசத்தை அகற்றி விட்டுப் பேசுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதற்கு ரோகிணி முகக் கவசம் அணியாமல் கூட்டத்தில் கலந்துக் கொள்ளக் கூடாது என்பதால் தாம் முகக் கவசத்தைக் கழற்றப் போவதில்லை என மறுத்துள்ளார்.   அத்துடன் தமக்குத் தொடர்பான எவ்வித விவாதமும் அங்கு நடக்காததால் தாம் கூட்டத்தில் இருந்து வெளியேற அனுமதி கோரி உள்ளார்.  சாரா மகேஷ் பதிலுக்கும் தாம் ஆட்சியரை அழைக்கவில்லை எனவும் தானாகவே அவர் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சாரா மகேஷ் ஏதாவது கூட்டம் நடக்கும் போது ஆட்சியருக்குத் தகவல் கொடுக்க வேண்டும் என்பதால் தகவல் அளித்ததாகவும் அவருக்கு நேரம் இருந்தால் இருக்கலாம் எனவும் இல்லை என்றால் தாராளமாக வெளியேறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.  இதையொட்டி ரோகிணி உடனடியாக கூட்டத்தில் இருந்து வெளியேறி உள்ளார்.  இந்நிகழ்ச்சி கர்நாடக அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.,