Duraisamy

 

முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகருக்கு வெள்ள சேதத்தைப் பார்வையிடச் சென்ற சென்னை மேயர் சைதை துரைசாமியை முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் அடித்து உதைத்ததாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சென்னை மாநகரம் முழுதும் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துவிட்டது. மக்கள் பெரும் துயரத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று, முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகருக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள சேதத்தைப் பார்வையிட சென்னை மாநகர மேயர் சென்றார்.

அப்போது அங்கு வந்தார் அந்தத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல். ( ஊழல் வழக்கிலிருந்து விடுபட்ட ஜெயலலிதா மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்காக வெற்றிவேல் ராஜினாமா செய்தார். இதையடுத்து வந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வர் ஆனார். தற்போது சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் வெற்றிவேல் இருக்கிறார்.)

இளையமுதலி தெரு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, மாநகராட்சி ஆணையர் விக்ரம்கபூருடன் சைதை துரைசாமி சந்தித்தார். அப்போது வெற்றிவேல், மேயர் சைதை துரைசாமியிடம் “இது எனது தொகுதி. சென்னை முழுவதற்கும் மேயர் என்றாலும் என் தொகுதிக்குள் வரக்கூடாது” என்று சொல்லி மேயரை அடித்து உதைத்தார். இதைப் பார்த்ததும் அமைச்சர், அதிகாரிகள், பொதுமக்கள் அனைவரும் தப்பி ஓடினர். தாக்கப்பட்டதில் சைதை துரைசாமியின் வேட்டி சட்டை சகதியானது.

சிறிது நேர தாக்குதலுக்கு பின் சுதாரித்த சைதை துரைசாமி, அங்குள்ள தனது ஆதரவாளர் வீட்டுக்குச் சென்று வேறு வேட்டி சட்டை மாற்றி கிளம்பினார்.

இப்படி பரவியுள்ள செய்தி சென்னை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.