டில்லி
இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் 81% திறனுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் தற்போது இரண்டு கொரோனா தடுப்பூசிகள்: போடப்பட்டு வருகின்றன. இவற்றில் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசியை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ளனர். மற்றொரு தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.
இதில் கோவிஷீல்ட் மருந்தின் மூன்று கட்ட சோதனைகளும் முடிவடைந்துள்ளன. இந்த மருந்து இரண்டாம் டோஸ் அளிக்கப்பட்ட பிறகு 70% கொரோனா தடுப்பு திறன் அளிப்பதாகத் தெரிய வந்துள்ளது.. கோவாக்சின் மருந்து மூன்றாம் கட்ட சோதனைகள் நடந்து வரும் நிலையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இந்த மருந்து போட்டுக் கொள்வோரிடம் இது குறித்த உறுதி மொழி பெறப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களது கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனைகளும் முடிவடைந்துள்ளன. இந்த தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்பட்ட பிறகு 81% கொரோனா தடுப்பு திறன் அளிக்கும் என்பது சோதனையில் நிரூபணம் ஆகி உள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.