சென்னை

மூன்றாம் அலை கொரோனா பரவல் அச்சம் உள்ளதால் சுகாதாரப் பணியாளர்களுக்குச் சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க மருத்துவர்கள் கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் தினசரி பாதிப்பு 12000 ஐ தாண்டி உள்ளது.  இதையொட்டி தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.  கூருதல் கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இரவு நேர ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரில் உள்ள 4 முக்கிய  பொது மருத்துவமனைகளில் ஒரே நாளில் சுமார் 100 சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இது சுகாதாரப் பணியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இது குறித்து தமிழக மருத்துவர் சங்கம் தமிழக அரசு சுகாதாரச் செயலருக்கு ஒரு கோரிக்கை கடிதம் எழுதி உள்ளது.

அந்த கடிதத்தில் மொத்தமுள்ள சுகாதார ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுக்குச் சுழற்சி முறையில் கட்டாய விடுப்பு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.  மேலும் கர்ப்பமாக உள்ளோர் மற்றும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோருக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் தற்போது மூன்றாம் அலை கொரோனா பரவல் குறித்த அச்சம் உள்ளதால் விடுப்பு கோரும் சுகாதார பணியாளர்களுக்கு அவர்களுடைய விடுப்பை எடுத்துக்கொள்ள எந்த கட்டுப்பாடும் இன்றி அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.   மேலும் சுகாதார பணியாளர்களுக்கு தற்போது பணி அதிகமாக உள்ளதால் பணி நேரத்தைக் குறைக்கவும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.