தேனி: முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது. கேரள மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மூவர் கண்காணிப்பு குழு தலைவர் பி.ஆர்.கே.பிள்ளை தெரிவித்தார்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி முல்லை பெரியாறு அணையை 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அடிக்கடி பார்வையிடுவது வழக்கம். தற்போது அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று கண்காணிப்பு குழுவினர் அணையை பார்வையிட்டனர்.
மத்திய நீர்வள ஆணையத்தின் அணைகள் பாதுகாப்பு பிரிவு முதன்மை பொறியாளர் பி.ஆர்.கே.பிள்ளை தலைமையில், தமிழக பிரதிநிதி தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரன், கேரள பிரதிநிதியாக வி.ஜே.குரியன் ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
6 மாத இடைவெளிக்கு பிறகு கண்காணிப்பு குழுவினர் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு முல்லைப்பெரியாறு அணையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தேக்கடியில் இருந்து காலை 11 மணிக்கு படகில் புறப்பட்டு சென்றனர். அவர்களுடன் துணை கண்காணிப்பு குழுவினரும் சென்றனர்.