
திருப்பூர் போலீசார் பதிவு செய்துள்ள கிரிமினல் வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பிரேமலதா சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிரேமலதா தாக்கல் செய்துள்ள மனுவில், என் கணவர் விஜயகாந்த், தே.மு.தி.க. தலைவராக உள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறேன்.
கடந்த 1-ந் தேதி திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினேன். அப்போது, தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களை பற்றி அவதூறாக பேசியதாக என் மீது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில், அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் புகார் கொடுத்தார். அதன்படி, என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான் அவதூறாக எதுவும் பேசவில்லை. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த கருத்தை வலியுறுத்தித்தான் பேசினேன். இதனால், வைகோவையும் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
எனக்கும், தே.மு.தி.க.வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரில் கூறப்பட்டுள்ளது போல் எந்த சம்பவமும் நடைபெறவில்லை. எனவே, இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வக்கீல் வி.டி.பாலாஜி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Patrikai.com official YouTube Channel