சென்னை,
புத்தாண்டில்  தமிழக முதல்வராக சசிகலா  பதவி ஏற்க இருக்கிறார்  என்று உறுதிப்படாத தகவல்கள் கூறுகின்றன.
நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் நாளை அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்க உள்ளார்.
இதை தொடர்ந்து  அதிமுகவில் அடுத்தடுத்து மூத்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு வரை தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து  அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின்  கூட்டம், இன்று மாலை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள  கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வராகவும் பதவி வகித்து வந்த ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்தது. அந்த இடத்தை சசிகலா தனது சாமர்த்தியத்தால் அபரிகத்துக்கொண்டார். அடுத்து தமிழக முதல்வர் பதவியை அலங்கரிக்க தயாராகி வருகிறார்.
நேற்று முதல் அவரது நடவடிக்கை முழுவதும், மறைந்த ஜெயலலிதாவைபோலவே மாறி உள்ளது. தொண்டர்களை சந்திக்கும்போதும் ஜெ.வை போலவே நடந்து கொள்கிறார்.
அவரைப்போலவே மிதமான மேக்கப்புடன், பச்சைநிறை சேலை உடுத்தி, கையில் கருப்பு கலர் ஸ்டிராப் உடனான வாட்ச் கட்டி ‘அம்மா’வை போலவே இருக்கிறார் ‘சின்னம்மா’  என அவரது ஆதரவாளர்கள் அங்கலாய்த்து வருகிறார்கள்.
கடந்த 5ந்தேதி தமிழக முதல்வராக பதவி வகித்து வந்த ஜெயலலிதா மறைவையடுத்து, உடனடி யாக ஓபிஎஸ் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
ஆனால், அவரது பதவி தற்காலிகமானதுதான் என கூறப்பட்டது. அதுபோலவே அவர் மீண்டும் தனது பதவியை விட்டுகொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஜெ. மறைவை தொடர்ந்து அவரது தோழி சசிகலா,  ஜெயலலிதா வகித்து வந்த அத்தனை பதவிகளையும் பிடிக்க குடும்ப சகிதமாக தீவிர முயற்சி செய்து வந்தார்.
அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்தது முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
இன்று மாலை நடைபெற இருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு,  தமிழக முதல்வர் ஓபிஎஸ்-சால் முன்மொழியப்பட்டு, சசிகலா முதல்வராக சசிகலா  தேர்வு செய்யப்படுவார் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அதைத்தொடர்ந்து ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வைத்து அவரை வெற்றி பெற செய்து விடலாம் என்று கணக்கு போட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் முடிந்ததை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆயத்தமாகிய வேளையில், அவர்களை சென்னையிலேயே தங்கி இருக்க கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.