vijayakanth
தேமுதிகவில் இருந்து முதலில் பண்ருட்டி ராமச்சந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, அதிமுகவில் இணைந்தார். தமிழழகன், அருண் சுப்பிரமணியன், அருண் பாண்டியன், மைக்கல் ராயப்பன், சாந்தி, சுந்தரராஜன், சுரேஷ், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்களாக செயல்பட்டு, கடந்த மாதம் அதிமுகவில் இணைந்தனர்.
இந்த நிலையில் நேற்று சந்திரகுமார், சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகிய 3 எம்எல்ஏக்களும் கட்சிக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி விஜயகாந்த் அவர்களை நீக்கினார். நீக்கப்பட்ட பிறகு, சந்திரகுமார் தனது அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே சந்திரகுமார் அணிக்கு அனகை முருகேசன், வெங்கடேசன் ஆகியோர் செல்ல உள்ளதாக தகவல்கள் பரவியது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று இரவே விஜயகாந்த், அதிருப்தி எம்ல்ஏக்கள் போக, தன்னிடம் உள்ள எம்எல்ஏக்களை தக்க வைத்துக்கொள்ள அவர்கள் அனைவரையும் சென்னையில் வந்து தன்னை சந்திக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதில் எத்தனை பேர் அழைப்பை ஏற்று வருகின்றனர் என்பதை பொறுத்தே, விஜயகாந்தும் அடுத்தக் கட்ட முடிவை எடுப்பார் என்று கூறப்படுகிறது.