சென்னை: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் பெயரைப் பயன்படுத்தி, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென தவறான தகவல்கள் பல்வேறு செல்போன் எண்களுக்கு தொடர்ச்சியாக குறுஞ்செய்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தன. இது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேஇ சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் பெயர் மற்றும் முகவரியை தவறாகப் பயன்படுத்தி சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். அவ்வாறு வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வமான பெயரையும், அதன் முகவரியையும் பயன்படுத்தி ஒருசில நபர்கள் தவறான தகவல்களை பரப்பி வருவது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இத்தகைய வதந்திகளைப் பரப்புவது அரசு மற்றும் நீதித்துறைக்கு எதிரான சட்டவிரோதச் செயலாகும்.
எனவே, போலித் தகவல்கள் அல்லது கடிதங்களை உருவாக்குவோர் மற்றும் அதனை பரப்புவோர் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் பொதுமக்கள் இது போன்ற போலியான தகவல்களையோ கடிதங்களையோ கண்டு பயப்படவோ, பதற்றமடையவோ வேண்டாம்.
இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ மர்ம நபர்கள் குறித்து தகவல் தெரிந்தாலோ, நேரடியாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரை நேரில் சந்தித்தோ 044-29551065 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோ தெளிவு பெறலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]