
தென்னிந்தியர்கள் காரத்தை அதிகம் விரும்பி உண்பார்கள். ஆதலால், எளிதில் கிடைக்கும் உப்புடன், காரமும் இயற்கையாகச் சேர்ந்துவிட்டது வடையுடன். ஆதலால் இங்கு உப்பு மற்றும் மிளகு சேர்த்து காரமாகச் செய்யப்படும் வடைகளானாலான மாலை ஆஞ்சநேயருக்குப் படைக்கப்படுகிறது.
ஆஞ்சநேயருக்கு இனிப்பான ஜாங்கிரி மாலை சார்த்தினாலும், காரமான வடைமாலை சார்த்தினாலும், இரண்டுமே உளுந்தினால் ஆனது என்பதே உண்மை. இரண்டுமே ராகு தோஷத்திலிருந்து நம்மை விடுவித்து, நல்லது செய்யும் என்பது மகிழ்ச்சியான விஷயம்தான் என்று காஞ்சி மகா ஸ்வாமிகள் கூறியுள்ளார்.
அனுமானுக்கு வாலில் தான் சக்தி அதிகம். அதனால் தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும்.
ராகுவின் தோஷத்திலிருந்து விடுபட மட்டுமல்லாமல், காரிய சித்திக்காகவும் அனுமனுக்கு வடைமாலை சார்த்தப்படுகிறது. அனுமனுக்குச் சார்த்தப்படும் வடைமாலை செய்வதற்கு, தோல் நீக்காத கறுப்பு உளுந்துதான் பயன்படுத்தப்படுகிறது. ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்’ என்ற அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றினால் நம் துன்பங்கள் சூரியனைக் கண்டு உருகும் வெண்ணெய் போல உருகி விடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைக்கும். துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும் கிட்டும் என்பது நம்பிக்கை. அவருக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் முடியும்.
அனுமனைச் சொல்லின் செல்வன் எனச் சிறப்பித்துக் கூறுவார்கள். இவரை வணங்குவதன் மூலம் சிறந்த பேச்சாளராக ஆக முடியும். அனுமனைப் பக்தியுடன் வழிபட்டால் நாவன்மை மேலோங்கும். அனுமன் ஜெயந்தி நாளில் அருகில் இருக்கும் ராமர் கோயில் அல்லது ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் நம்முடைய வாழ்வில் சகல நலன்களையும் பெறலாம்.
சனிப் பெயர்ச்சி நடப்பவர்கள் அனுமனை வணங்கி வருவது பல சங்கடங்களைப் போக்கும். தீய சக்திகள், காத்து கருப்பு, செய்வினை, மனநோய், சகல தோஷ தடைகள் நீங்குவதற்காகப் பக்தர்கள் ஆஞ்சநேயரைப் பிரார்த்தனை செய்யலாம். வாஸ்து கோளாறு உள்ள வீட்டின் வாசல் படியில் அனுமன் படம் வைப்பதால் தோஷ கோளாறுகள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.