போனில் வந்தார் நியூஸ்பாண்ட்.
“என்ன பாஸ், ஆளையே காணோம்..” என்றோம்.
“பல உள்விவகாரங்களை நீரே போடடுத் தாக்குகிறீரே…!” என்றவர், ” மாண்புமிகுக்களிடம் மீண்டும் ரெய்ட் நடந்திருக்கிறது” என்றார்.
“அதான் ஏற்கெனவே நடந்ததாக தகவல்கள வந்தனவே!”
“ஏற்கெனவே ஐவர் அணியினர் சொத்துக்கள் தலைமையின் சார்பில் ரெய்ட் செய்யப்பட்டன. இப்போது அதே குழுவில் ஒருவரை மீண்டும் ரெய்ட் செய்திருக்கிறார்கள். இது நேற்று நடந்திருக்கிறது!”
“ஓ..! நேற்றுமா..?”
“ஆமாம்! முந்தைய ரெய்டில் சிலவற்றை தலைமை அமைத்த ரெய்ட் டீம் கவனிக்கவில்லையாம். கட்சிக்குள் இருக்கு அந்த மாண்புமிகுவின் எதிரிகள் போட்டுக்கொடுத்தன் பேரில், புதிய தகவல்கள் கிடைக்க.. மறுபடி ரெய்ட்!”
“அட!”
“அவரது பி.ஏ. வீட்டிலும் ரெய்ட் நடந்திருக்கிறது என்பது கூடுதல் தகவல்!”
“சரி, ரெய்டில் என்னதான் கிடைத்ததாம்..”
“கிடைத்த டாக்குமெண்டுகளைப் பார்த்து ரெய்ட் டீம் அதிர்ந்திவிட்டதாம். கிட்டதட்ட பெரும் பொக்கிஷமே கிடைத்திருக்கிறது என்கிறார்கள். கிடைத்ததை வைத்து மூன்று தேர்தல்களை சந்தித்துவிடலாம் என்று வியப்பும் ஆத்திரமுமாய் சொல்லியிருக்கிறது தலைமை. இதிலிருந்தே புரிந்துகொள்ளும் எவ்வளவு கிடைத்திருக்கும் என்று!”
“யே.. யப்பா…!”
“இதற்கே வாய் பிளக்கிறீரே… அந்த மாண்புமிகுவின் வாரிசு அமெரிக்காவில் இருக்கிறார். அவர் பெயரிலான சொத்துக்கள் ரெய்ட் டீம் கவனத்துக்கு வரவில்லையாம். அதனால் தப்பித்திருக்கிறது!
“ஓ..! ஆனால் இப்போது சொல்லிவிட்டீரே.. அதுவும் போகப்போகிறது! அது சரி, அந்த மாண்புமிகு யாரென்று சொல்லவில்லையே…!”
“இதை முதலிலேயே கேட்டிருக்க வேண்டும்!”
“கேட்டு என்ன செய்யப்போகிறோம். எந்த மாண்புமிகுவாக இருந்தால் என்ன.. மக்கள் பணத்தை இப்படி ஆட்டையப் போடுகிறார்களே என்கிற ஆதங்கம்தான் வருகிறது..”
“உண்மைதான். ஆனாலும் யாரென்பதை நான் கோடிகாட்டாவிட்டால் நன்றாக இருக்காது அல்லவா. அதனால் சொல்கிறேன்.. ஷாக் அடிக்கும் துறை மறறும் தள்ளாடும் துறைக்கு சொந்தக்காரர் அவர்!”
“ஓ.. புரிந்துவிட்டது!”
“இன்னொரு விசயம்… பவ்யமான அந்த பெரிய மாண்புமிகுவிடமும் ரெய்ட் நடந்திருக்கிறது. ஆனால் எதுவும் தேறவில்லை. ஏற்கெனவேதான் எல்லாத்தையும் எடுத்துட்டீங்களே என்று கண் கலங்கினாராம். ஆனாலும் தலைமை நம்பவில்லை. அந்த பெரிய மாண்புமிகு மீதான கண்காணிப்பு தொடர்கிறது!”
– லைனை கட் செய்துவிட்டார் நியூஸ்பாண்ட்.