சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்து உள்ளது. இதன் காரணமாக அடையாறு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
நிவரைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவான புரெவி புயல், நேற்று இரவு இலங்கையின் திரிகோணமலை பகுதியில் கரையை கடந்த நிலையில், இன்று ராமேஸ்வரம் நோக்கி வந்துகொண்டிருக்கிறது. தற்போது பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று இரவு பாம்பனுக்கும், தூத்துக்குடிக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரெவி புயல் காரணமாக, சென்னை உள்பட பல மாவட்டங்களில் நேற்று முதல் மீண்டும் மழை கொட்டி வருவதால், செம்பரம்பாக்கம் நீர்தேக்கத்திற்கு வரும் தண்ணீரில் அளவு அதிகரித்து வருகிறது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நடப்பாண்டில் 2வது முறையாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
ஏரியில் தற்போதைய நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி 22.15 அடியாக உள்ளது. அணையின் உயரம் 24 அடி என்பதால், 22 அடியை நீர்மட்டம் எட்டியதும், பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது ஏரிக்கு 3000 கனஅடிநீர் வந்துகொண்டிருக்கிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றுபகல் 12 மணிக்கு ஏரியில் இருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்படும். இதன் காரணமாக அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், காவலூர், குன்றத்தூர், திருநீர்மலை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிவர்புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டும் நிலை ஏற்பட்டதால் நவம்பர் மாதம் 25ந்தேதி அன்று மதியம் 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர், அது படிப்படியாக உயர்த்தப்பட்டது. பின்னர் புயல் கரையை கடந்து, மழை நின்றதால், தண்ணீர் திறக்கப்படுவதும் குறைக்கப்பட்டது நிறுத்தப்பட்டது.
தற்போது, புரெவி புயல் காரணமாக மீண்டும் மழை பெய்து வருவதால், 2வது முறையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது.