அது 2012ம் வருடம் ;செப்டம்பர் மாதம். நாள்..?
தீ நாக்குகளால் கொடூரமாக தாக்கப்பட்டு 38 அப்பாவிகள் பலியான கறுப்பு நாள்.
சிவாகசியில் செயல்பட்ட பட்டாசு ஆலை ஒன்றில் திடுமென வெடி மருந்து வெடித்து வெள்ளம்போல் தீ பாய… அங்கு பணிபுரிந்த 38 பேர் பலியானார்கள்.
அது மட்டுமல்ல.. மேலும் பலர் காயமடைய.. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
உடல் முழுதும் எரிந்த நிலையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கதறினார்கள். அவர்களைக் காப்பாற்ற அக்னிஜித் என்ற மருந்து தேவை.
அந்த மருந்தை தயார் செய்யும் கேரள நிறுவனமான பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தை பதட்டத்துடன் தொடர்புகொள்கிறார்கள் மருத்துவர்கள்.
அந்த நிறுவனத்தின் உரிமையாளர், பதறிப்போய், “ஏழைத் தொழிலாளர்கள் தீயில் சிக்கி தவிக்கிறார்கள். பணம் எதுவும் வாங்காமல் அவர்களுக்குத் தேவையான மருந்தை உடனே கொடுத்து உதவுங்கள்” என்று தனது பணியாளர்களுக்கு உத்தரவு போடுகிறார்.
35 லட்ச ரூபாய் மருந்து பொருட்கள் இலவசமாக வந்து சேர்கிறது மருத்துவமனைக்கு!
அப்படி இலவசமாய் மருந்து பொருட்களை அனுப்பி வைத்த அந்த நிறுவனத்தின் அதிபர்… நடிகர் மம்முட்டி!
“மேலும் எவ்வளவு மருந்து வேண்டுமோ வாங்கிக்கொள்ளுங்கள் இலவசமாக” என்றும் தகவல் அனுப்பினார்.
அவர் தமிழில் நடித்தது குறைவு.. தமிழ்நாட்டில் சம்பாதித்தது குறைவு. அதோடு, எந்த ஒரு நிலையிலும், “தமிழ் மக்கள்தான் எல்லாம்.. அவர்களுக்காக உயிரையும் கொடுப்பேன்” என்றெல்லாம் மேடைகளில் வசனம் பேசியதே இல்லை.
ஏன்.. இவ்வளவு பெரிய உதவி செய்தும், எந்த ஒரு விளம்பரமும் தேடவில்லை.
இப்போது தமிழகமே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு எழும்ப முடியாமல் கிடக்கிறது. வீடு வாசலை இழந்து தவிக்கிறார்கள் மக்கள். பலியானோர் எண்ணிக்கையும் அதிகம்.
தமிழ் நடிகர்கள் எவரேனும் உதவி செய்தார்களா?
விஷாலும், விஜய்யும் ஏதோ சிறு உதவி செய்தார்களாம். அதை ஊடகங்களுக்குச் சொல்லி பெரும் விளம்பரம் தேடிக்கொண்டார்கள்.
மற்றவர்கள் இதையும் செய்யவில்லை. இத்தனைக்கும் “என்னை வாழ வைக்கும் தமிழ் தெய்வங்களே.. “ என்று இவர்கள் சொல்லாத மேடை இல்லை.. பேட்டிகள் இல்லை!
தீ விபத்தின் போது உணர முடிந்தது மம்முட்டியின் தங்க மனதை! இந்த மழை வெள்ளம் வெளுத்துவிட்டது இங்குள்ள ஹீரோக்களின் சாயத்தை!
மம்முட்டி.. நடிகர் மட்டுமல்ல.. மனிதரும்கூட!