கொல்கத்தா,

மம்தா பானர்ஜி குறித்து வன்முறை ஏற்படுத்தும் வகையில் பேசிய பாஜக நிர்வாகிக்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி அன்று பாஜக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அந்தப்பேரணியில் சென்றவர்கள்  அங்கிருந்த மதராசா பள்ளிக்குள் செல்ல முற்பட்டனர். இதனால்  போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

அதிருப்தி அடைந்த பாஜக-வின் இளைஞரணி அமைப்பான யுவமோர்ச்சா தலைவர் யோகேஷ் வர்ஷ்னே என்பவர் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார்.  அவரது தலையை வெட்டிக்கொண்டு  கொண்டு வந்திருந்தால் ரூ. 11 லட்சம் வழங்குவதாக யோகேஷ் வர்ஷ்னே கூறினார்.

மேலும் அவர்,   இந்துக்களை குறிவைத்து மம்தா பானர்ஜி  தாக்குவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.11 லட்சம் வழங்கப்படும் என்று பாஜக நிர்வாகி ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் இன்று எதிரொலித்தது.

மக்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி சவுகதா ராய் இவ்விவகாரத்தை முன்வைத்து பேசினார். பாஜக நிர்வாகியின் இத்தகைய பேச்சை கண்டிப்பதாகவும் தெரிவித்தார். இதேபோல் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியும் இத்தகைய பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், இது போன்ற பேச்சுக்களுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், மேற்கு வங்க அரசு யோகேஷ் வர்ஷ்னே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.