
புதுடெல்லி:
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஏ.பி.வி.பி மாணவர் சங்க முன்னாள் மற்றும் இந்நாள் உறுப்பினர்கள் மனுஸ்மிருதி நூலின் நகல்களை எரித்து நேற்று ( மார்ச்-8) ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டனர்.
பார்ப்பனிய ஆதிக்கத்தை வலியுறுத்தும் இந்துமத நூலாக மனுஸ்மிருதி விளங்குகிறது. மனித சமூகத்தின் ஜாதியப்பாகுபாடுகளை நிலைநாட்டுகிற நூலாகவும், பெண்களை தரக்குறைவாக விமர்சிக்கும் நூலாகவும் மனுஸ்மிருதி விளங்குவதால் அந்த உள்ளடக்கம் இடம்பெற்றுள்ள பக்கங்களின் நகலினை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாக அம்மாணவர்கள் தெரிவித்தனர்.
பெண்களை தரக்குறைவாய் விமர்சிக்கும் எதனையும் சகித்துக் கொள்ளமுடியாது என்ற செய்தியை உலகத்திற்கு தெரிவிக்கும் வகையில் மனுஸ்மிருதியை எரிக்கும் போராட்டத்திற்கு சர்வதேச மகளிர் தினத்தை தேர்வு செய்ததாக ஏ.பி.வி.பி. மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் செயல்பட்டு வரும் ஏ.பி.வி.பி.கிளையின் துணைத் தலைவர் ஜட்டின் கொரையா கூறியதாவது:-
மனுஸ்மிருதி நூலில் பெண்களைப் பற்றி தவறாக 40 விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன. எனவே பெண்களை இழிவு செய்யும் அந்த 40 விஷயங்களை உள்ளடக்கிய நகல்களை சர்வதேச மகளிர் தினத்தன்று எரித்து எமது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளோம்.
மனுஸ்மிருதி நூலின் 2/213 ஆம் பகுதியில் ஆண்களை மயக்குதற்காகவே பெண்கள் இந்த உலகில் இயற்கையாகவே கவர்ச்சியாக படைக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் ஒருபோதும் ஆண் துணையின்றி பெண் வாழ முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், 2/214 இல் ஆண்களை வழி தடுமாற வைப்பவர்கள் பெண்கள்தான் என்றும் இதில் கற்றவர்,முட்டாள் என்ற எவ்வித வேறுபாடுமின்றி இருவரையும் தங்களின் ஆசை அடிமைகளாகவே வைத்திருப்பது பெண்களின் வர்க்க குணம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. எனவே தான் இந்நூலின் நகல்களை எரித்த்தாக அவர் கூறினார்.
சமீபத்தில் சித்தாந்த ரீதியாக ‘ஏ.பி.வி.பி.யிலிருந்து விலகிய பிரதீப் நர்வால் என்பவர் இப்போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தவர்களில் முக்கியமானவர். அவர் இதுபற்றிக் கூறும்போது, “மனுஸ்மிருதியில் உள்ள இந்த 40 விஷயங்கள் பெண்கள் மற்றும் தலித் மக்களுக்கு எதிராக உள்ளது. அதனால் அதன் நகல்களை எரிக்க முடிவெடுத்தோம். நான் செய்தது சரியில்லை என்பவர்கள் என்னிடம் கேள்விகள் எழுப்பலாம்” என்றார்.
மேலும், சமீபகாலமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் எந்த ஒரு நிகழ்வு என்றாலும் மிகுந்த முன் எச்சரிக்கையுடன்தான் நிர்வாகத்தினர் கையாளுகின்றனர். ஆனால் இந்த மனுஸ்மிருதி நகல் எரிப்பு போராட்டம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் எவ்வித சட்டம் ஒழுங்கு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நாங்கள் தெளிவுபடுத்தியதால்தான் எங்கள் போராட்ட்த்திற்கு நிர்வாகம் அனுமதி அளித்தது எனத் தெரிவித்தார்.
இப்போராட்டாத்தின் அனைத்து நிகழ்வுகளையும் பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்தனர்.
Patrikai.com official YouTube Channel