மனித உரிமை அமைப்புகள் கவனிக்குமா?
பெரிய வணிகவளாகம், உணவகத்தின் வாசலில், அந்த சிறுமிகள் நிற்பார்கள். வண்ண அட்டைகளை கைகளில் இடுக்கிக்கொண்டிருக்கும் அந்த சிறுமிகளின் முகத்தில் ஏழ்மை கறுப்பு படர்ந்திருப்பதை நீங்களும்கூட கவனித்திருப்பீர்கள். நம்மில் பலர், அந்த சிறுமிகளின் ஈனஸ்வர குரலுக்காகவே புத்தகம் வாங்கியிருப்போம்.
ஆனால் அப்படிப்பட்ட சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை நெஞ்சு பதற வைக்கிறது.
சென்னை தி.நகரில் ஓட்டல் முன்பு புத்தகம் விற்பனை செய்திருக்கிறாள் அந்த ஏழை சிறுமி.
“எங்க கடைக்கு வர்ற கஸ்டமரை தொந்தரவு செய்யாதே” என்று எச்சரித்திருக்கிறது, ஓட்டல் நிர்வாகம். சிறுமியோ, மீண்டும் அங்கேயே நின்று புத்தகம் விற்றிருக்கிறாள்.
அவ்வளவுதான்.. ஓட்டல் பாதுகாவலர், சிறுமியை கடுமையாக தாக்க ஆரம்பித்திருக்கிறார்.
பல நூறு பேர் சென்று வரும் தி.நகர் பகுதியில், அந்த சிறுமியின் அவல ஓலம் யார் காதிலும் விழவில்லை.
அந்த சிறுமி மூர்க்கத்தனமாக தாக்கப்படுவதைப் பார்த்து கண நேரம் பதைத்தை கடந்துவிட்டார்கள் மக்கள்.
ஓட்டல் அருகில் என்றாலும் சாலை ஓரத்தில் நின்று வயிற்றுப்பாட்டுக்காக புத்தகம் விற்றிருக்கிறாள் அந்த சிறுமி. இதில் என்ன தவறு? ஒரு வாதத்துக்கா தவறு என்றே வைத்துக்கொண்டாலும், அவளை தாக்குவதற்கு, அந்த ஓட்டல் நிர்வாகத்துக்கு என்ன உரிமை இருக்கிறதா?
இது மனித உரிமை மீறல் இல்லையா…?
எத்தனையோ அநீதிகளை தாங்களாகவே முன்வந்து விசாரிக்கும் மனித உரிமை அமைப்பு இந்த தாக்குதல் பற்றியும் விசாரித்திருக்கலாமே..
இந்தக் கொடுமை நடந்து ஒரு வருடம் ஆகிறது. அப்போது டெக்கான் கிரானிகல் இதழில் இந்த செய்தி வெளியானது.
இனியாவது மனித உரிமை அமைப்பு இந்தக் கொடுமை பற்றி விசாரிக்க வேண்டும்.