மனிதனுக்கு பன்றி இதயம் : விஞ்ஞானிகள் தீவிர முயற்சி
மனிதனுக்கு பன்றி இதயத்தை வெற்றிகரமாக பொருத்துவதற்கான சாதனை முயற்சியில் மருத்துவ விஞ்ஞானிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.
நாளுக்குநாள் உடல் உறுப்புகள் தானம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் மனித உறுப்புகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனைப்போக்கும் வகையில் மனிதனின் உறுப்புகளுக்கு மாற்றாக விலங்குகளின் உறுப்புகளை பொருத்துவதில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மனிதனின் பழுதடைந்த இதயத்தை மாற்றிவிட்டு அதற்குப்பதிலாக பன்றியின் இதயத்தை பொருத்துவதற்கான ஆய்வில் விஞ்ஞானிகள் தீவிரம் காட்டிவருகின்றனர்.
மனித உயிர்களை காப்பாற்றுவதற்காக விலங்குகளின் இதயம், நுரையீரல், கல்லீரல் போன்றவைகளை மனிதனுக்குப் பொருத்தி மாற்று அறுவை சிகிச்சை செய்வதை மருத்துவ உலகின் புனிதத்துவமாக பார்க்கப்ப்டுகிறது. ஆனால் மனிதனுக்கு விலங்குகளின் உறுப்புகளை பொருத்துவது அவ்வளவு எளிதானதாக இல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க மற்றும் ஜெர்மன் நாட்டு விஞ்ஞானிகள் பன்றியின் இதயத்தை ஆப்ரிக்காவின் ஒரு வகை குரங்குகள் மற்றும் மனிதக்குரங்குகள் ஆகியவைகளுக்குப் பொருத்தி இரண்டரை ஆண்டுகளாக அவற்றை உயிரோடு வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த வெற்றி பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்துவதற்கான முயற்சியில் பெரும் முக்கியத்துவம் கொண்டது என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட மேரிலாண்ட் தேசிய இதய, நுரையீரல் மற்றும் இரத்த நிறுவன ஆய்வு இணை பேராசிரியர் முஹம்மது மொஹைதீன் கூறினார்.
வேறு விலங்குகளிடமிருந்து பெறப்படும் உடல் உறுப்புகளை மற்ற விலங்குகளுக்கு பொருத்தும்போது அதை நோய் எதிர்ப்பு முறையில் ஏற்றுக் கொள்ளமுடியுமா என்பது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.எனவே இந்த ஆய்வின்போது, பன்றியின் கண்ணுக்கு தெரியாத வகையில் உள்ள மரபணுக்கள் நோய் எதிர்ப்பு தன்மைகள் ஆகியனை மாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதனடிப்படையில் மனித உடலுக்கு ஏற்ற வகையில் சில மரபணுக்கள் மாற்றம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். 1960 முதல் குரங்கினங்களின் சிறுநீரகங்கள், இதயம் மற்றும் கல்லீரல்களை மாற்று அறுவை சிகிச்சை செய்யும் சோதனையில் விஞ்ஞானிகள் இறங்கி உள்ளனர். அவ்வாறு உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட விலங்குகள் ஒரு சில மாதங்களுக்கு மேல் பிழைக்கவில்லை.
மனிதர்களின் மரபணுக்களை ஒத்த குரங்கினங்களின் உறுப்புகள் மனிதர்களுக்கு கொடையாக இருக்கும் என கருதப்பட்ட்து. ஆனால் அவ்வாறு எடுகப்பட்ட குரங்குகளின் உறுப்புகள் மனித உடல் செயல்பாடுக்கு ஒத்துவரவில்லை. மேலும் சிம்பன்சி போன்ற குரங்கினங்கள் சில மிகவும் ஆபத்தானவை. இதனால் குரங்கின்ங்களை ஒதுக்கிவிட்டு பன்றியின் உறுப்புகளை மாற்றிப் பொருத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றின் உறுப்புகள் மனித உடலமைப்புக்கு ஏற்ற விதத்தில் அதன் குணநலன்கள், நோய் எதிர்ப்பு சக்தி, வளரும் தன்மை ஆகியவை உள்ளது. எனவே பன்றியின் உறுப்புகளை மனிதர்களுக்கு மாற்றிப்பொருத்துவது பெரும் சிக்கல்களை ஏற்படுத்தாது. மனிதனுக்கு பன்றி இதயத்தைப் பொருத்துவது பற்றிய எமது ஆய்வு இன்னும் தொடரும். இந்தப் பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றால் உடல் உறுப்பு தானத்திற்கான பற்றாக்குறை ஏற்படாது என்று விஞ்ஞானி முஹம்மது மொஹைதீன் கூறினார்.