போபால்:

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி தன் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப் பரீட்சை இன்று நடக்கிறது. அனைவரும் தவறாமல் வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு தன் கட்சி எம்எல்ஏக்களுக்கு கொறடா மூலம் காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது.

முதல்வர் கமல்நாத்

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவிடமிருந்து ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 109 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஆட்சியமைத்து கமல்நாத் முதல்வரானார். காங்கிரஸ் கட்சிக்கு 2 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள், ஒரு சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ ஆகியோர் ஆதரவு அளித்துள்ளனர்.
இந்நிலையில், மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்க இன்று சட்டப் பேரவையில் காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிக்குமாறு காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கொறடா மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஞாயிற்றுக் கிழமையன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வர் கமல்நாத்தின் வீட்டில் கூடினர்.

அங்கு நடத்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் திக் விஜய் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, காண்டிலகால் புரியா,விவேக தங்கா மற்றும் சுரேஷ் பச்சோரி ஆகியோர் கலந்து கொண்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி என்று கூட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏக்கள் உறுதி அளித்தனர்.
பாஜகவின் முன்னாள் அமைச்சர்கள் நரோட்டம் மிஸ்ரா, புபீந்தர் சிங் ஆகியோர் குதிரை பேரம் நடத்துவதாக திக் விஜய் சிங் இரண்டு நாட்களுக்கு முன்பு குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதனை பாஜக மூத்த எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கோபால் பார்கவ் மறுத்துள்ளார். நாங்கள் கட்சியின் கடும் உழைப்பாளிகள். களத்தில் தான் எதிரியை சந்திப்போம். குறுக்கு வழியை கையாள மாட்டோம் என்றார்.
இதற்கிடையே, சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராக வேறு ஒருவரை நியமிக்குமாறு முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பாஜக மேலிடத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். 13 ஆண்டுகளாக முதல்வராக இருந்து விட்டேன். எனவே எதிர்கட்சித் தலைவர் என்று பளுவை வேறு ஒருவர் தோளில் இறக்கி வைக்க விரும்புகின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.