v 1

இன்று: காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வாழப்பாடி கே ராமமூர்த்தி அவர்களின் நினைவு தினம் இன்று. 

1940ம் வருடம் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிறந்த வாழப்பாடியார்,  தனது 19ம் வயதில் 1959ல் திராவிடர் கழகத்தில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் துவக்கினார்.

பிறகு இந்திய தேசிய காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டவர்,  1968ல் சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக பதவி வகித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான  ஐ. என். டி. யூ. சியின் தலைவராக சிறப்பாக  பணியாற்றினார். அந்த சமயத்தில் தொழிலாளர் பிரச்சினைகள் பலவற்றை தனது திறமையால் தீர்த்துவைத்தார்.

காங்கிரசின் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். “காமராஜருக்குப் பிறகு, தமிழக காங்கிரஸ் உத்வேகத்துடன் செயல்பட்டது அந்த சமயத்தல்தான்” என்று அரசியல் நோக்கர்கள் விமர்சித்தார்கள்.

 

வாழப்பாடியார்
வாழப்பாடியார்

ஆறு முறை இந்திய மக்களவை உறுப்பினராகவும் இரு முறை இந்திய நடுவண் அரசில் அமைச்சராகவும் பணியாற்றினார். .

1977 பொதுத் தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980, 1984, 1989, 1991 பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலிருந்தும், 1998 தேர்தலில்சேலம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1991-92ல் பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

1998-99ல்  வாஜ்பாய் அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 

இடையில் ராஜீவ் காங்கிரஸ் என்ற கட்சியைத் துவக்கிய வாழப்பாடி ராமமூர்த்தி, 2001ல் மீண்டும் காங்கிரசில் இணைந்து விட்டார். 2002ம் ஆண்டு அக்டோர் 27ம் தேதி இயற்கை எய்தினார்.

இவரைப்பற்றி கூறும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, “காமராஜருக்குப் பிறகு மக்கள் தலைவராக திகழ்ந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி!” என்று புகழாரம் சூட்டுகிறார்.

திருச்சி வேலுச்சாமி
திருச்சி வேலுச்சாமி

மேலும் இவர், “காமராஜருக்குப் பிறகு மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப்போயிருந்த தமிழக காங்கிரசை, மீண்டும் மக்களிடம் கொண்டு சென்றவர் வாழப்பாடியார். காமராஜரைப்போலவே, எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, மிகப்பெரிய பொறுப்புகளை வகித்தவர்.  காமராஜரைப்போலவே கீழ்மட்ட தொண்டர்களிடம் நெருங்கிப் பழகி, கட்சியை பலப்படுத்தியவர்: காமராஜரைப்போலவே பதவியை துச்சமென மதித்தவர்.

1992ம் ஆண்டு நரசிம்மராவ் அமைச்சரவையில் இருந்த போது காவிரிப் பிரச்சனையில் மத்திய அரசின்போக்கைக் கண்டித்து மத்திய அமைச்சர் பதவியை உதறித் தள்ளியவர் வாழப்பாடியார்” என்று புகழாரம் சூட்டுகிறார் திருச்சி வேலுச்சாமி.

அரசியல் என்பதே பதவிக்காகத்தான் என்று எழுதப்படாத விதியாகிவிட்ட நிலையில், பொதுப் பிரச்சினைக்காக பதவியைத் துறந்த வாழப்பாடியாரை இன்று நினைவுகூர்வோம்!