pmk
பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த Allen&MIller நிறுவனமும், Nature’s Watchdog நிறுவனமும் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளன. தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்தும், அதுகுறித்த மக்களின் நிலைப்பாடுகள் குறித்தும் கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் மாற்றம் ஏற்படப்போவதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன. மது ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, நிர்வாக சீர்திருத்தம் ஆகியவை தான் தமிழகத்தில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் என்று பா.ம.க கூறிவருகிறது.
கல்வி, சுகாதாரம் ஆகிய சேவைகளும், விவசாயத்திற்கான இடுபொருட்களும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என பா.ம.க. கூறி வருகிறது. இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பது கருத்துக்கணிப்புகளில் தெரியவந்திருக்கிறது. உதாரணமாக மது ஒழிப்பு தான் தமிழகத்தின் முக்கிய பிரச்சினையாக மக்களால் பார்க்கப்படுகிறது. மதுவை ஒழிக்க யாரால் முடியும் என்ற வினாவுக்கு விடையளித்தவர்களில் 56.60 விழுக்காட்டினர் பாட்டாளி மக்கள் கட்சியால் தான் மது ஒழிப்பு சாத்தியம் என்று கூறியுள்ளனர். வட மாவட்டங்களில் மட்டும் தான் பா.ம.க.வுக்கு செல்வாக்கு என்ற பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் தான் பா.ம.க. மீது பொதுமக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதும் இந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
மதுவை ஒழிக்க மருத்துவர் அன்புமணியால் மட்டுமே முடியும் என்று வட மாவட்ட வாக்காளர்களில் 52.7 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். ஆனால், அதைவிட அதிகமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் 53.60 விழுக்காட்டினரும், மேற்கு மாவட்டங்களில் 57.70 விழுக்காட்டினரும், தென் மாவட்டங்களில் 58.70 விழுக்காட்டினரும் அன்புமணி இராமதாஸ் முதலமைச்சர் ஆனால் மட்டும் தான் மது விலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்கள். அதேபோல், இந்த விஷயத்தில் கிராமப்புறங்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிக ஆதரவு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
உழவர் நலன் பாதுகாக்கப்பட்டிருக்கிறதா? என்ற வினாவுக்கு 74.10 விழுக்காட்டினர் பாதுகாக்கப் படவில்லை என்றும், 23.3 விழுக்காட்டினர் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தை 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற பா.ம.க.வின் குற்றச்சாற்று இதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளை கடவுள்களாக மதிக்கும் கட்சி, விவசாயிகள் நலனுக்காக ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ள கட்சி என்ற வகையில் மக்களின் இந்த நிலைப்பாட்டை பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர்க் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும், விவசாயத்துக்கான அனைத்து இடுபொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பா.ம.க.வின் வாக்குறுதிகள் உழவர்களை கவரும் என நம்புகிறேன்.
ஊழல் ஒழிப்பு, ஓட்டுக்கு பணம் தரும் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டுதல், பயனற்ற இலவசங்களை ஒழித்தல் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டுக்கும் மக்களிடம் அதிக ஆதரவு காணப்படுகிறது. அதுமட்டுமின்றி தொடர்ந்து நான் கூறிவருவதைப் போன்று இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் 55.6 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், பா.ம.கவுக்கும் இடையில் தான் கடும் போட்டி நிலவுவதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அம்மாவா… அன்புமணியா? என்ற போட்டி தான் நிலவுவதாக நான் கூறி வருவதும் இதன் மூலம் மெய்யாகியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான பாட்டாளி மக்கள் கட்சியின் பயணம் எதிர்பார்த்தபடியே வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை நடந்தவை அனைத்தும் நன்றாகவே நடந்துள்ளன… இனி நடப்பவையும் நன்றாகவே நடக்கும் என்ற நம்பிக்கையை இக்கருத்துக்கணிப்பு ஏற்படுத்தியுள்ளது. பா.ம.க. மீது மக்கள் கொண்டுள்ள இந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் மது ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, நிர்வாக சீர்திருத்தம், இலவசக் கல்வி மற்றும் மருத்துவம், வேளாண் கடன் தள்ளுபடி, விவசாயத்துக்கான இடுபொருட்கள் இலவசம் உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான பா.ம.க. அரசு நிறைவேற்றும் என மீண்டும் உறுதியளிக்கிறேன்’’ என்கிறார்.