மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த 6ந்தேதி தொடங்கிய அகில இந்திய கிஸான் சபா விவசாயிகள் பேரணி நேற்று இரவு மும்பை வந்தடைந்தது. தற்போது மகாராஷ்டிரா சட்டப்பேரவை நோக்கி பேரணி சென்று வருகிறது.
இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணி அளவில் விவசாய சங்க பிரதிநிதிகளை முதல்வர் பட்னாவிஸ்-ஐ சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.
விளை பொருட்களுக்கு உரிய விலை வேண்டும். கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மகராஷ்டிராக மாநில விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் மாநில பாஜக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து மகாராஷ்டிரா மாநில விவசாயிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநில தலைமை செயலகத்தை முற்றுகையிடும் வகையில் பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த பேரணியை அகில இந்திய கிஷான் சபா விவசாய சங்கத்தினர் சுமார் 40 ஆயிரம் விவசாயிகளுடன் கடந்த 5-ம் தேதி நாசிக்கில் இருந்து பேரணியை தொடங்கினர்.
180 கி.மீ தொலைவிலான இந்த பேரணி பல்வேறு மாவட்டங்கள் வழியாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்றிரவு விவசாயிகள் பேரணி மும்பை நகரை வந்ததடைந்தது.
நேற்று, நள்ளிரவிலேயே, அங்கிருந்து மீண்டும் தொடங்கிய விவசாயிகள் பேரணி, மும்பையில் உள்ள ஆசாத் மைதானம் நோக்கி தொடர்ந்தது. அவர்களுக்கு உள்ளூர் மக்கள் உணவு, குடிநீர் வழங்கி உதவினர்.
போக்குவரத்து மற்றும், மாணவர்களின் தேர்வு நேரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே, இரவுவில் பேரணியாக சென்றதாகவும், இந்த பேரணியில் மாநிலம் முழுவதும் இருந்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, அகில இந்திய கிஸான் சபாவின் மாநில பொதுச் செயலாளர் அஜித் நவாலே ‘‘கடன் தள்ளுபடி, உரிய விலை போன்றவற்றை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாததற்கு மாநில அரசு பதில் கூற வேண்டும்.
இவை அனைத்தும் ஏற்கனவே அரசு உறுதி அளித்த கோரிக்கைகள் தான். பயிர் பாதிப்பு காரணமாக விவசாயிகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அவர்கள் வேறு வழியின்றி தங்களது கோரிக்கை வெளிப்படுத்த இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்’’ என்றார்.
180 கீலோ மீட்டர் தொலைவிலான இந்த பேரணி, 12 ஆயிரம் விவசாயிகளுடன் தொடங்கியது. பேரணியின்போது அந்தந்த பகுதி விவசாயிகள் சேர்ந்ததன் வாயிலாக தற்போது 60 ஆயிரமாக உயர்ந்தது. இன்றும் மேலும் பல ஆயிரம் பேர் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் முதல்வர் தேவேந்திரா பட்னாவிஸ் விவசாயிகளை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.