கோப்பு படம்
கோப்பு படம்

 
தென்னகத்தின் கும்பமேளா’ என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய மகாமகம் பெருவிழாவுக்கு கும்பகோணத்தில் தயாராகி வருகிறது.
இப்போதே தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மகாமக குளத்தில் புனித நீராடி செல்கிறார்கள். பெருவிழா அன்று நாற்பது லட்சம் பேருக்கு மேல் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.  பன்னிரண்டு  வருடங்களுக்கு  ஒரு முறை மகாமகம் நடைபெறும் நாளும் அவரது பிறந்த நட்சத்திர நாள் ஆகும்.
ஆகவே, முதல் முறை ஜெயலலிதா முதல்வரான பிறகு வந்த 1992ம் ஆண்டு மகாமகப் பெருவிழா அன்று  குடந்தை வந்து மகாமக குளத்தில் புனித நீராடினார்.
அவர் பிறந்த பிறகு நடைபெறும் ஆறாவது மகாமகம் இது. இதில் 1992, 2004, 2016 ஆகிய மூன்று மகாமகங்களின்போது அவரே தமிழக முதல்வர்.  இந்த சிறப்பு அவருக்கு மட்டுமே உண்டு.
அவர் முதல்முறை ஆட்சிக்கு வந்தபோது 1992-ம் ஆண்டு மகாமகத்தில் கலந்துகொண்டு மகாமக குளத்தில் புனித நீராடினார். உடன், அவரது உடன்பிறவா தோழி சசிகலாவும் நிராடினார்.  ஒருவருக்கு ஒருவர் நீரை எடுத்து ஊற்றி நீராடினர்.
அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டு சுமார் நூறு பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது அவரது ஆட்சிக்கு  அவப்பெயரை ஏற்படுத்திய சம்பவங்களில்  மிக முக்கியமானதாகும். .
இதன் காரணமாக, 2004ம் ஆண்டு மகாமகம் நடந்த போது ஜெயலலிதா குடந்தைக்கு போகவில்லை.
இந்த ஆண்டு மகாமகம் பெருவிழா துவங்கியதில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியிருக்கிறார்கள்.  வரும். 22ம் தேதி தீர்த்தவாரி நடைபெற உள்ளது. அதாவது மகாமக பெருவிழா.  அன்றைய தினம் நாற்பது லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த பெருவிழாவிற்கு முக்கிய பிரமுகர்கள் வருவதற்கு ஏதுவாக கும்பகோணம் அரசு தன்னாட்சி கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நான்கு  ஹெலிகாப்டர்கள் ஒரே நேரத்தில் இறங்குவதற்கு வசதியாக ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.  வருவாய்துறையினர்,  காவல்துறையினர்,  தீயணைப்புத்துறையினர் அவ்வப்போது அங்கு  சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
மத்திய, மாநில அமைச்சர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் வருவார்கள் என்பதால் ஹெலிபேட் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  அதே நேரம் முதல்வர் ஜெயலலிதா வரலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.