ஹேமபுஷ்கரணி என்கிற கும்பகோணம் பொற்றாமரைக் குளத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி ஆற்றிலிருந்து நேற்று தண்ணீர் விடப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதேபோல மகாமகக் குளத்திலும் சோதனை அடிப்படையில் தண்ணீர் விடப்பட்டது.
108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு இணையாகப் போற்றப்படுவது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி சுவாமி கோயில் ஆகும். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் பொற்றாமரைக் குளம் உள்ளது.
உலகமே அழிந்த பிரளய காலத்தில் அமிர்தம் விழுந்த இடங்கள், மகாமகக் குளமும், பொற்றாமரைக் குளமும்தான் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் இக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். இங்கு நீராடினால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இத்தகைய சிறப்பு பெற்ற இத்திருக்குளத்தில் மகாமகத்தின்போது பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். மகாமகத்தை முன்னிட்டு இக்குளம் ரூ.72 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டது. அதோடு, காவிரி ஆற்றிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்கும் பணி ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றது. இந்தப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து காவிரி ஆற்றிலிருந்து குளத்துக்கு வரும் நீர்வழித்தடத்தைக் கண்டுபிடித்தனர். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பாதையில் சோதனை முறையில் பொற்றாமரைக் குளத்தில் தண்ணீர் விடப்பட்டது.
இதேபோல மகாமகக் குளத்தில் தீர்த்தவாரிக்காக சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் விடப்பட வேண்டும். இதையொட்டி சோதனை முறையில் கும்பகோணம் நகராட்சியின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து மகாமகக் குளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு…
மகாமகத்தையொட்டி கும்பகோணத்தில் பொதுப்பணித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் திருமாறன், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் அசோகன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தார்கள்.
மகாமகக் குளம் மற்றும் அரசலாற்றிலிருந்து மகாமகக் குளத்துக்கு தண்ணீர் வரும் நீர்வழிப் பாதை, பொற்றாமரை குளம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்கள்.
பிறகு முதன்மை தலைமைப் பொறியாளர் திருமாறன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “மகாமகக் குளம், பொற்றாமரைக் குளத்தில் தேக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்காமல் பழைய நீரை வெளியேற்றிவிட்டு புதிய நீரை நிரப்பும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொள்வார்கள்” என்றார்.
இரும்பு தடுப்புகள் அகற்றம்
மகாமக குளத்தைச் சுற்றி நான்கு கரைகளிலும் 12 அடி உயரத்துக்கு இரும்புக் கம்பிகள் கொண்ட 183 இணைப்புகளால் மிகப்பெரிய தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. வருடந்தோறும் நடைபெறும் மாசி மகத்தின்போது மக்கள் பெருமளவில் கூடுவார்கள். அப்போது கூட இந்த தடுப்புகளை அகற்றுவதில்லை. ஆனால் மகாமகப் பெருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குளக்கரையில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. .
கும்பேஸ்வரர் கோயிலில் மகா ருத்ர யாகம்
மகாமகப் பெருவிழா சிறப்பாக நடைபெறவும், எந்த விதமான பிரச்சினைகள், விபரீதம் நேரிடாமல் விழா நடைபெற வேண்டும் என்பதற்காகவும் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மகா ருத்ர யாகம் சிறப்பாக நடைபெற்றது. 100 சிவாச்சாரியார்கள் பங்கேற்று காலை 8 மணி முதல் 12 மணி வரை மகா ருத்ர யாகத்தை நடத்தினர். ஏற்பாடுகளை சிங்கப்பூர் ‘அன்பே சிவம்’ அமைப்பினர் செய்திருந்தனர்.
சுவாமிகள் வீதியுலா ஒத்திகை
மமாமகத்தின்போது, குடந்தையில் உள்ள 12 சிவன் கோயில்களில் உள்ள சுவாமிகள் மற்றும் அஸ்திர தேவர்கள் தீர்த்தவாரிக்காக மகாமகக் குளத்துக்கு புனித நீராட எடுத்துச் செல்லப்படுவார்கள். அதே போல, 5 வைணவ கோயில்களின் சுவாமிகள் காவிரி ஆற்றின் சக்கரப் படித்துறைக்கு புனித நீராடச் செல்லப்படுவார்கள்.
இது வரும் 22ம் தேதி நடக்கும். இதற்கான ஒத்திகை நடந்தது. கோயில்களில் சுவாமிகளை எடுத்து வைக்காமல், பட்டறைகளை மட்டும் கொண்டு இந்த வீதியுலா ஒத்திகை நடைபெற்றது.