மகன்-மருமகன் விருப்பத்தை நிராகரித்த ராமதாஸ்….
கருணாநிதி,ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ் ஆகிய மூவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.
சுமார் 25 ஆண்டுகளாக தங்கள் கட்சியின் வாக்கு வங்கியில் சேதாராம் ஏற்படாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு சேமித்து வைத்திருப்பதே –அது.
தமிழ்நாட்டு வாக்குகள்-
அ.தி.மு.க.-தி.மு.க.வுக்கு தலா 30 % + என்றால், பா.ம.க.வுக்கு 5 % + நிரந்தரமாக உண்டு.
1996-ல் பா.ம.க.முதன் முதலாய் தேர்தலில் போட்டியிட்டது.அப்போது 5% வாக்குகளை பெற்றது. அந்த கட்சியில் இருந்து சங்கிலித்தொடர் போல் வரிசையாக பண்ருட்டி ராமச்சந்திரன்,தீரன்,வேல்முரு கன் போன்ற ஒரு டஜன் புள்ளிகள் விலகி சென்ற போதும் பா.ம.க.வின் வாக்கு சதவீதம் ஒரு புள்ளியும் குறையவில்லை. அதே 5 சதவீதத்தை யாரும் களவாடி விடாமல் பராமரித்து வருகிறார்-ராமதாஸ்.
அவரைப்போலவே கட்சி ஆரம்பித்து, ஆரம்ப நாட்களில் அவரைப்போலவே தனித்து களம் கண்ட வைகோவும்,விஜயகாந்தும் –பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்தபின் –தங்கள் வாக்குகளை தொலைத்து விட்டனர்.
முதல் தேர்தலில் தனித்து நின்று 10% வாக்குகள் வாங்கிய விஜய்காந்துக்கு இப்போது வாக்கு சதவீதம் 2% ஆக குறைந்து விட்டது. வைகோவின் நிலையும் அதுவே.
இருவரது நெருங்கிய சகாக்களும், இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் வெளியேறிய நிலையில் –அவர்கள் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. மக்களவை தேர்தல் கூட்டணிக்காக கதவு திறந்து காத்து கிடக்கிறார்கள்.அல்லது மற்றவர்கள் கதவை தட்டிக்கொண்டிருக்கிறார்கள். .
பா.ம.க.வின் நிலையோ- நேர் எதிர்.
அ.தி.மு.க.-தி.மு.க.ஆகிய இரு கட்சிகளுமே பா..ம.க.வுடன் திரை மறைவில் பேசிக்கொண்டிருக்கின்றன.உடன்பா ட்டில் உதறல் இல்லை.’சீட்’ எண்ணிக்கையில் தான் சிக்கல்.
ஆரம்பத்தில் அ.தி.மு.க.வுடன் தான் பேசிக்கொண்டிருந்தார் –அன்புமணி. காங்கிரஸ் செயல் தலைவராக மச்சான் விஷ்ணு பிரசாத் நியமிக்கப்பட்ட பின் காட்சிகள் மாறிவிட்டன. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் பா.ம.க.வை கொண்டு வந்து விட வேண்டும் என்பது விஷ்ணுவின் விருப்பம்.அன்புமணி ஓ.கே.சொல்ல- ராமதாஸ் இதனை ஏற்க மறுத்து விட்டார்.
என்ன விஷயம்?
தி.மு.க.வுடனான கூட்டணிக்கு அன்புமணி வைத்த வாதங்கள் இவை:
‘’அ.தி.மு.க.-பா.ஜ.க.கூட்டணியி ல் இருந்தால் சிறுபான்மை ஓட்டுகள் நமக்கு கிடைக்காது.இரண்டு ஆளும் அரசுகள் மீதான எதிர்ப்பு நம்மையும் பாதிக்கும்.நமது மண்டலத்தில் அ.தி.மு.க.இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது.தி.மு.க.வுடன் சேர்ந்தால் ஆரணி (விஷ்ணு போட்டியிட உத்தேசித்துள்ள தொகுதி) தர்மபுரி(அன்புமணி தொகுதி) ஆகிய இரண்டிலும் எளிதாக வெல்லமுடியும்.காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. நமக்கு அமைச்சர் பதவி நிச்சயம்.’’
இதனை ராமதாஸ் எடுத்த எடுப்பிலேயே நிராகரித்து விட்டதாக தெரிகிறது.
அவரது விளக்கம் வேறு தினுஷில் உள்ளது.
‘’கடந்த காலங்களில் நாம் அ.தி.மு.க.வை விட தி.மு.க.வை அதிகம் விமர்சித்துள்ளோம். மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் நிதியும், தமிழக அரசு ரேஷன் கார்டில் வழங்கப்போகும் ரூ.2 ஆயிரமும் மக்கள் மனதை தற்காலிகமாக மாற்றிவிடும்.
இன்னொரு முக்கிய அம்சம். பா.ம.க. தி.மு.க.கூட்டணியில் அங்கம் வகித்தாலும் விடுதலை சிறுத்தைகள் அங்கிருந்து வெளியேற வாய்ப்பில்லை.ஸ்டாலின் விட மாட்டார். அவர்களது ஓட்டுகள் ஒன்று கூட நமக்கு விழப்போவதில்லை.வடக்கே நாம்தான் தி.மு.க.வுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறோம்.உள்ளடி வேலை செய்து அவர்கள் நம்மை கவிழ்க்கும் வாய்ப்புகளே அதிகம்.நாம் கேட்கும் தொகுதிகளையும் தர மாட்டார்கள். கூட்டி –கழிச்சு பாத்தா அ.தி.மு.க .கூட்டணியே நமக்கு ‘செட்’ ஆகும் ‘’
இவ்வாறு விவரித்து- தனது பக்க நியாயத்தை கூறி விட்டு அடுத்த கட்ட வேலையில் மூழ்கி விட்டார்.
அ.தி.மு.க. கூட்டணியில் தான் பா.ம.க. இருக்கும் என்பதை உணர்த்தும் முகமாக‘’தமிழக அரசு அறிவித்துள்ள ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதி உதவி வரவேற்கத்தக்கது.அரசின் இந்த நிதி உதவி சரியான நேரத்தில் வழங்கப்படும் மிகத்தேவையான உதவி ‘’ என்று பாராட்டி ராமதாஸ் கொடுத்துள்ள ‘சர்டிபிகேட்’-
கூட்டணிக்கான அச்சாரம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
-பாப்பாங்குளம் பாரதி