Emmanuel Macron-Brigitte Trogneux love story: If you don’t mind, age doesn’t matter

 

ப்ரான்ஸின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள மெக்ரோனை விட தற்போது அவரது மனைவி பிரிகெட்டியைப் பற்றித்தான் அதிகம் பேசப்படுகிறது.

ஏன் தெரியுமா?

மெக்ரோனுக்கும் அவருக்கும் இடையேயான வயது வித்தியாசம்தான்! ஆம் 40 வயதே ஆகும் மெக்ரோனின் மனைவி பிரிகெட்டிக்கு வயது 64. 24 வயது வித்தியாசமுள்ள பிரிகெட்டியை தமது 15 ஆவது வயதிலேயே மெக்ரோன் காதலித்திருக்கிறார். மெக்ரோன் படித்த பள்ளியில், பிரிகெட்டி நாடக ஆசிரியராக பணியாற்றி உள்ளார். மெக்ரோனின் சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் பிரிகெட்டிக்கு பிடித்துப் போய்விட்டதாம்! பிரிகெட்டி அப்போது மூன்று குழந்தைகளுக்கு தாய்!

சாக்லெட் நிறுவன அதிபரின் வாரிசும், வங்கியாளர் ஒருவரது மனைவியுமான பிரிகெட்டி, மெக்ரோனிடம் மயங்கி விட்டார். இதையறிந்த மெக்ரோனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மெக்ரோனுக்கு 18 வயதாகும் வரை பொறுத்திருக்குமாறு அவரது பெற்றோர் பிரிகெட்டியை கேட்டுக்கொண்டனர்.

2007ல் மெக்ரோனுக்கு 30 வயதாகும் போது, பிரிகெட்டியின் 54 ஆவது வயதில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

அதிபர் தேர்தலில் மெக்ரோன் வெற்றி பெற்றதாக அறிவித்தபோது, குடும்பத்தினர் அனைவரும் ஒரே மேடையில் கூடி, வெற்றியை கொண்டாடினார்கள்.

இமான்வெல் மெக்ரோனுக்கு பிரிகெட்டியின் முதல் திருமணத்தின் மூலம் மூன்று குழந்தைகளும், ஏழு பேரப்பிள்ளைகளும் பரிசாக கிடைத்தனர்!

மெக்ரோன், பிரான்சின் பொருளாதார அமைச்சராக பதவியேற்றபோது, பிரிகெட்டி தனது ஆசிரியப் பணியை விட்டு விலகி, கணவரின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக மாறினார்.

அரசியலில் பெண்களுக்கு உரிய பங்களிப்பு தரவேண்டும் என்ற கருத்தை மெக்ரோனிற்கு ஏற்படுத்தியதற்காக பிரிகெட்டி பாராட்டப்படுகிறார். ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், “என் மார்சே” என்ற மக்ரோங்கின் புதிய இயக்கம், தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்களில் பாதி பேர் பெண்களாக இருப்பார்கள் என்று மெக்ரோன் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் முதல் பெண்மணியின் பங்கை முறைப்படுத்த விரும்புவதாக ஒரு பேட்டியில் கூறிய மெக்ரோன், “நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், மன்னிக்கவும், நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவருக்கும் முக்கியமான பொறுப்பும், இடமும் உறுதியானது” என்றும் குறிப்பிட்டார்.

“முதல் பெண்மணியின் பொறுப்புக்கு சம்பளம் கிடையாது, அவர் அந்த பதவிக்கு மதிப்பை ஏற்படுத்துவார், குரல் கொடுப்பார், விஷயங்களின் மேல் கருத்து கொண்டிருப்பார், எனது பக்கத்தில் எப்போதுமே இருந்தாலும், பொதுத்தளத்திலும் பங்காற்றுவார்” என இமான்வெல் மெக்ரோன் கூறுகிறார்.

மாணவரான மெக்ரோன், பிரிகெட்டியிடம் இருந்து அறிவுரைகளை கேட்பது போன்ற கார்ட்டூன்கள் இப்போது பிரான்சில் பிரபலமாகியிருக்கிறது. அதிபர் தேர்தலில் மெக்ரோனுடன் இறுதிச்சுற்று போட்டியில் இருந்த மரைன் லெ பென் மிகவும் ஜாக்கிரதையாக மக்ரோங்-பிரிகெட்டியின் உறவின் தோற்றம் குறித்து கிண்டலடித்திருந்தார்.

“மெக்ரோன்… ஆசிரியர்-மாணவர் விளையாட்டை என்னுடன் விளையாட நீ முயல்வது தெரிகிறது. ஆனால், அது எனக்கு ஒத்துவராது” என்று ஏளனப் புன்னகையுடன் கூறியிருந்தார் மரைன் லெ பென்.

திருமதி மெக்ரோன் தனது கணவருடனான வயது வித்தியாசம் குறித்த பிறரின் விமர்சனத்தை புன்னகையுடன் எதிர்கொள்கிறார்.

ஒரு புத்தகத்தில் “2017 தேர்தலை மக்ரோங் சந்திக்க வேண்டும். ஏனென்றால், 2022-இல் எனது முகத்தோற்றமே அவருக்கு சவாலாக இருக்கும்” என்று தன்னைப் பற்றிய மற்றவர்களின் விமர்சனத்தை தாமே வெளிப்படுத்தி இருக்கிறார் பிரிகெட்டி.

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும், ப்ரான்ஸின் புதிய அதிபர் மெக்னோவுக்கும் ஒரு முரண் ஒற்றுமை உண்டு. ட்ரம்ப் அவரது மனைவி மெலினாவை விட 24 வயது மூத்தவர் .  மெக்ரோன் அவரது மனைவி பிரிகெட்டியை விட 24 வயது இளையவர்!